சசிகலா முதல்வராக வேண்டுமென தம்பிதுரை விடுத்த அறிக்கை வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின்

அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள சசிகலா, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளதற்கு, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை MKSTALIN
Image caption தம்பிதுரைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

இது தொடர்பாக திமுக பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''சசிகலா முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பித்துரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

''முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தமிழக முதலமைச்சராக தேர்வு செய்தார்கள். அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் திமுக எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது'' என்று ஸ்டாலின் தன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தம்பிதுரையின் கோரிக்கை பற்றி தன் அறிக்கையில் மு. க. ஸ்டாலின் கூறியதாவது, ''இச்சூழ்நிலையில், பதவியேற்று பத்து நாட்களுக்குள்ளாகவே, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்றும், 'சசிகலா முதலமைச்சராக வேண்டும்' என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

படத்தின் காப்புரிமை Image copyright@AIADMKOFFICIAL

இப்போது, திடீரென்று பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பித்துரை தமிழக முதலமைச்சர் பதவியை சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் அவர்கள் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, 'சசிகலா முதல்வராக வேண்டும்' என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது'' என்று மு.க. ஸ்டாலின் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

''குறிப்பாக துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்'' என்று தெரிவித்த ஸ்டாலின், ''ஆளுநர் அவர்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை மக்களவை துணை சபாநாயகர் திரு. மு. தம்பித்துரை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தம்பிதுரை இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்