தமிழக மீனவர் படகுகளை ஒப்படைக்காத விவகாரத்தில் இலங்கையை கண்டிக்க பன்னீர் செல்வம் கோரிக்கை

இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஒப்படைக்காமல் காலதாமதம் செய்யும் நடவடிக்கைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை PTI

தமிழ் நாட்டு மீனவர்களிடம் இருந்து, இலங்கை அரசு பறித்து வைத்திக்கும் படகுகள் அனைத்தும் இலங்கை அரசின் உடைமையாக கருதப்படும் என்று இலங்கை கடல் மற்றும் நீர்வள ஆதார வளர்ச்சித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருப்பவை தேவையற்ற ஆத்திரமூட்டுகின்ற கருத்துக்களாக அமைந்திருப்பதால், ஆழ்ந்த கவைலையுடன் இந்த கடிதத்தை எழுதுவதாக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் இந்த கடித்ததில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய-இலங்கை மீனவர் கூட்டு குழு டிசம்பர் 31 ஆம் நாள் கூடியுள்ள நிலையிலும், ஜனவரி 2 ஆம் தேதி கொழும்பில் நடைபெறுகின்ற அமைச்சர்கள் நிலை கூட்ட நேரத்தின் போதும் அது கூடுகின்ற வேளையில் இத்தகைய கருத்துக்கள் வெளிவந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு தங்களது மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் விவகாரத்தை எழுப்பியுள்ளது.

நீண்டகாலமாக நிலவி வருகின்ற இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மனதளவில் முன்வந்திருக்கும் மீனவர்களுக்கு குறிப்பாக இந்திய மீனவர்களுக்கு இந்த கருத்துக்கள் எச்சரிக்கையூட்டும் வகையில் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழக-இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பாகவும், இலங்கை கைப்பற்றியுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளையும், எழுதிய கடிதங்களையும் ஒ. பன்னீர் செல்வம் மேற்கோள் காட்டியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு கைப்பற்றிய 80 படகுகள் 2015 ஆம் ஆண்டு தான் விடுவிக்கப்பட்டன. அதில், 2 முழ்கி விட்டன. 16 புதுப்பிக்க முடியாத அளவுக்கு அழிந்திருந்தன, 32 படகுகள் பெரிய சேதங்களையும், 33 சிறிய சேதங்களை கொண்டிருந்தன. இதனால் தமிழக மீனவர்களுக்கு அதிக நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைப்பற்றிய படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மேற்கொள்ளும் மிகவும் தாமதமான உத்தி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து, இழப்புக்களை ஏற்படுத்துவதை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அவர் நினைவூட்டியுள்ளார்.

இத்தகைய கருத்துக்களை இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவிப்பது, இது முதல்முறையில்லை என்று தெரிவித்திருக்கும் ஒ. பன்னீர் செல்வம், இந்திய அரசு இதுகுறித்து தன்னுடைய வன்மையான கண்டனத்தை பல்வேறு நிலைகளிலும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

1974 ஆம் ஆண்டு லட்சத் தீவை இலங்கைக்கு வழங்கிய பின்னர், அதில், இந்திய மீனவருக்கு மீன் பிடிக்க இருக்கும் உரிமையை மீட்க வழக்கு நடைபெற்று வருகின்ற நிலையில், இப்படிப்பட்ட கருத்துக்கள், பிரச்சனையின் தீர்வுக்காக நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக அமைந்துவிடும் என்று ஒ. பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இந்த பின்னணியில், தமிழக மீனர்வகளிடம் இருந்து கைப்பற்றிய படகுகள் அனைத்தையும், அவை நன்றாக இருக்கின்ற நிலையிலேயே உரிமையாளர்களிடம் வழங்கிட இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இலங்கையில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் 51 மீனவர்களையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என்று அவர் இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.