'2030-இல் அறிவியல் துறையில் முதல் மூன்று இடங்களை பெறும் நாடுகளில் இந்தியா இடம்பெறும்'

ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 104-ஆவது இந்திய அறிவியல் மாநாடு தொடங்கியது. இம்மாநாடு ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது.

படத்தின் காப்புரிமை Narendra Modi TWITTER
Image caption 104-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோதி

104-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றியதாவது, ''இந்தியாவின் மூலோபாய பார்வைக்கு நாட்டின் அறிவியல் மற்றும் விஞ்ஞான குழுக்கள் மிகச் சிறப்பாக பங்களித்துள்ளன. விண்வெளி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் இடம்பெற முடிந்தது. இதற்கு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்திய விண்வெளித் திட்டங்கள் தான் காரணம்'' என்று தெரிவித்தார்.

வரும் 2030-ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், முதல் மூன்று இடத்தை பெறும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெறும் என்று மோதி நம்பிக்கை தெரிவித்தார்.

''நமது விஞ்ஞானிகள் தங்களின் முயற்சிகளை மேலும் மேம்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது'' என்று தெரிவித்த மோதி, நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சியை உண்டாக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை சக்திவாய்ந்த கருவிகளாக அமையட்டும் என்று குறிப்பிட்டார்.

''சிறந்த மற்றும் புதுமையான யோசனைகளை உருவாக்கிட, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பயிற்சி அளிக்க வேண்டும்'' என்று மோதி தெரிவித்தார்.

நாட்டின் பெண் விஞ்ஞானிகளின் பயிற்சிக்காகவும் சமமான வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த நரேந்திர மோதி, அரசு விஞ்ஞான ஆராய்ச்சி முயற்சிகளை ஆதரிப்பதற்கு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஐந்து நாட்கள் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைப்பதற்காக திருப்பதி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோதியை , ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார்.

தொடர்புடைய தலைப்புகள்