அகிலேஷ் - முலாயம் இடையே தொடர்ந்து சமரச முயற்சி: சைக்கிள் சின்னம் தப்புமா?

கடந்த சில நாட்களாக சமாஜ்வாதி கட்சி தலைவர்களிடையே நடந்து வரும் மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில், உத்தர பிரதேச மாநில முதல்வரான அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தையும், சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) லக்னோவில் பேச்சுவார்த்தைநடைபெற்றது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption அகிலேஷ் - முலாயம் இடையே தீர்வு ஏற்படுமா?

இக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் உத்தரப்பிரதேச மாநிலத் தலைவர் ஷிவ்பால்சிங் யாதவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஸாம் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அகிலேஷ் யாதவ், முலாயமுடன் தனியாக ஆலோசனை நடத்திச் சென்ற பிறகு, அவரது விரோதியாகக் கருதப்படும் முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால் யாதவ் முலாயம் சிங்குடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், அகிலேஷ் மற்றும் முலாயம் தரப்புக்கு இடையே தீர்வு காணப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தெளிவாகத் தெரியவில்லை. சமாஜ்வாதி கட்சியின் சார்பாக இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 30) உத்தரப் பிரதேச மாநில முதல்வரான அகிலேஷ் யாதவை சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்குவதாக, தனத்தையும், முலாயம் சிங் யாதவ் அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption ஷிவ்பால் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ்

ஆனால், அதற்கு அடுத்த நாளே, அகிலேஷை முலாயம் சிங் யாதவ் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதியன்று நடந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாநாட்டில் அகிலேஷ் தரப்பால் ஷிவ்பால் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் நீக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவ்

ஞாயிற்றுக்கிழமை நடந்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த முலாயம் சிங் யாதவ், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் எடுத்த முடிவுகள் செல்லாது என்றும் தெரிவித்தார்.

சமாஜ்வாடி கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அகிலேஷ் தரப்பினர் கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே, நேற்று ( திங்கள்கிழமை) முலாயம்சிங் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று சைக்கிள் சின்னம் தனது தலைமையிலான கட்சிக்கு உரியது என்று கூறி மனு கொடுத்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், இரு தரப்பும் கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரி வருவதால், கட்சியின் சின்னம் குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையம் சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.

அதுவரை சமாஜ்வாதி கட்சியின் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்