பயிர் பாதிப்புக்கு விரைவில் நிவாரணத் தொகை - பன்னீர் செல்வம் அறிவிப்பு

வறட்சி சூழ்நிலையில் பயிர் நிலைமைகள் குறித்து உயர்நிலைக்குழு அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்குரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு அரசு வழங்கும் என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இதற்காக, சென்னை நீங்கலாக, இதர மாவட்டங்களை நேரடி ஆய்வு செய்து , பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு வழங்கக்கூடிய பயிர் நிவாரணத் தொகை தவிர, பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டுத் தொகையும் பெற இயலும் என்று பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

டெல்டா பகுதிகளில் பயிர்க் காப்பீடு செய்துள்ள 11.01 லட்சம் ஏக்கர் நிலங்களில் 5.49 லட்சம் விவசாயிகள் பிரிமியம் தொகையாக 44.81 கோடி ரூபாயும், டெல்டா அல்லாத பகுதிகளில் 6.71 லட்சம் விவசாயிகள் 36.30 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளனர்.

விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகைக்கான மாநில அரசின் பங்காக 410 கோடி செலுத்தப்படுகிறது. இதனால், பயிர் பாதிப்பு அளவை பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை இழப்பீடு தொகை பெற முடியும்.

கர்நாடகத்திலிருந்து மொத்தமாக 66.60 டி.எம்.சி. அடி தண்ணீர் பெற்றாலும், போதிய நீர் கிடைக்கவில்லை. மேலும், தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் குறைவாகவே பெய்ததால், மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியை உறுதி செய்ய மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்படி, மாவட்டங்களின் 10 சதவீத அளவு கிராமங்களில் பயிர் நிலை ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு பின்னரே மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க இயலும்.

பயிர் பாதிப்பு நிலைமைகளை நேரில் கண்டறிந்து உயர்நிலைக் குழுக்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்கும் என்று முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்