திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், அக்கட்சின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Image copyrightMKSTALIN
Image caption திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

இன்று (புதன்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது.

இன்றைய திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியவுடன் காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கியூபா நாட்டின் புரட்சிகர தலைவர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் முன்னாள் திமுக அமைச்சர்கள் சற்குண பாண்டியன், கோ. சி.மணி, பத்திரிக்கையாளர் சோ. ராமசாமி, காந்தியவாதி சசி பெருமாள் உள்ளிட்டோரின் மறைவுக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் திமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களாக கூறப்படும் அன்புநாதன் மற்றும் சேகர் ரெட்டி போன்றவர்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை கைப்பற்ற வேண்டும் என்றும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலினை ஆக்க வேண்டும் என்ற தீர்மானத்தை திமுகவின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் முன்மொழிந்தார். அதனை தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் வழிமொழிந்தார். பின்னர், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

திமுகவின் பொருளாளராக தொடர்ந்து மு. க. ஸ்டாலின் செயல்படுவார் என்று தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன், கூடுதல் பொறுப்பாக கட்சியில் அவர் செயல் தலைவராகவும் செயல்படுவார் என்று தெரிவித்தார்.

கடந்த 1969-ஆம் ஆண்டு திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்ட கருணாநிதி கலந்து கொள்ளாத முதல் பொதுக்குழு கூட்டம் இன்றைய கூட்டமாகும். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று நடக்கும் பொதுக்குழுவில் கருணாநிதியால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்