உறுப்பினர் முதல் செயல் தலைவர் வரை: மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் கடந்துவந்த அரசியல் பயணம் பல சவால்களும் சோதனைகளும் நிறைந்தவை.

திமுகவின் செயல் தலைவராக மு. க. ஸ்டாலின் தேர்வு: திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

படத்தின் காப்புரிமை MK STALIN TWITTER
Image caption திமுகவின் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

திமுகவின் முதல் செயல் தலைவர்

இதற்கு முன்பு, திமுகவில் செயல் பதவி இல்லாத நிலையில், அக்கட்சியின் முதல் செயல் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1970-களில், மிசா அவசரச் சட்ட காலத்தில் சிறை சென்ற ஸ்டாலின், தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் செயல் தலைவராக தற்போது ஆகியுள்ள நிலையில், அவர் இதுவரை திமுகவில் பல பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் சென்னை மாநகராட்சி மேயராகவும், தமிழக அமைச்சராகவும், துணை முதல்வராகவும் மு. க. ஸ்டாலின் பதவி வகித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை MK STALIN TWITTER
Image caption திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற மு. க. ஸ்டாலின்

பள்ளிப் பருவத்திலேயே அரசியல் பணி

 • தனது பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்டிய மு.க. ஸ்டாலின், தனது வீடு அமைந்திருந்த சென்னை கோபாலபுரம் பகுதியில் திமுக பிரதிநிதியாக செயல்பட்டார். அப்பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார்.
 • 1970-களில் திமுக வட்டப் பிரதிநிதியாகவும், மாமன்ற பிரதிநிதியாகவும் இருந்த மு.க. ஸ்டாலின், இளைஞர்களை ஒருங்கிணைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்கவும், கட்சி பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
 • பின்னர், 1980-இல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி துவக்கினார்.
 • ஆரம்பத்தில் திமுக இளைஞரணியின் அமைப்பாளராகத் செயல்பட்ட மு.க. ஸ்டாலின் , பின்னர் நீண்ட காலமாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த 1984-இல் மு.க. ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
படத்தின் காப்புரிமை IMAGE COPYRIGHTMKSTALIN
Image caption திமுகவில் பல பதவிகளை வகித்த ஸ்டாலின்

பொருளாளராக நியமனம்

 • சிறிது காலம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்த ஸ்டாலின், 2008-இல் திமுகவின் பொருளாளராக நியமனம் செய்யப்பட்டார்

மு. க. ஸ்டாலின் கண்ட தேர்தல் களங்கள்

 • கடந்த 1984-ஆம் ஆண்டில், முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் களமிறங்கிய மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
 • அதன் பின்னர், 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
 • 2011-ஆம் ஆண்டிலும், கடந்த ஆண்டு ( 2016) நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மு. க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Image caption ஆறு முறை சட்டமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின்

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்

 • தற்போது தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக மு. க. ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

சென்னை மாநகர மேயர்

 • நீண்ட இடைவெளிக்கு பிறகு, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவின் சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்தார்.
 • கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மாநகராட்சி மேயராக மு.க. ஸ்டாலின் இருந்த போது, சென்னையில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
 • 2001-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அதிமுக அரசு கொண்டு வந்த 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற சட்டத்தால் தனது மேயர் பதவியை துறந்து, ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தொடர்ந்தார்.
 • 2006-ஆம் ஆண்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போது, உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 2006 முதல் 2011 வரை அவர் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
படத்தின் காப்புரிமை mk stalin
Image caption தேர்தல் பிரசாரத்தில் மு. க. ஸ்டாலின்

முதல் துணை முதல்வர்

 • கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக துணை முதல்வர் பதவியை மு.க. ஸ்டாலின் வகித்தார்.
 • கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுகவின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ததிலும், பல வேட்பளார்களை முடிவு செய்ததிலும் ஸ்டாலின் பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது.

நமக்கு நாமே சுற்றுப்பயணம்

 • 2015-ஆம் ஆண்டு 'நமக்கு நாமே' என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
Image caption நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு. க. ஸ்டாலின்

மு. க. அழகிரியுடன் கருத்து வேறுபாடு

 • மு. க. ஸ்டாலினுக்கும், அவருடைய சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் தென் மண்டல செயலாளருமான மு. க. அழகிரிக்கும் பலத்த கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், கடந்த காலங்களில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது மு. க. அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 • கடந்த 2001-ஆம் ஆண்டில், சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி,சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்