வறட்சி நிலை குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டம்: முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தின் வறட்சி நிலை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமெனதி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மாநில தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்த மு.க. ஸ்டாலின், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்; அது குறித்து விவாதிக்க தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள, அதிர்ச்சியில் இறந்த விவசாயிகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டாவது நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை அளிக்க வேண்டும், காட்பாடி தொகுதியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 250 பேருக்கு 5 மாதமாக சம்பளம் வழங்காத பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களை முதல்வரிடம் பேசியதாக மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த மு.க. ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் வகுத்துத்தந்த விதிமுறைகளைச் சரியாக கடைபிடித்து தி.மு.க. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியதாகவும் அ.தி.மு.க. அரசு அதனைச் செய்யாததால்தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தச் சந்திப்பின்போது, முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துடன் மாநில அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். மு.க. ஸ்டாலினுடன் துரைமுருகன், கே.என். நேரு ஆகியோர் உடன் சென்றனர்.

இதற்கிடையில், இன்று காலையில் மாநில தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 31 அமைச்சர்களும் பங்கேற்றனர். இதில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்ற தகவலை அரசு இதுவரை வெளியிடவில்லை.