உண்மைக்கு மாறான தகவல்களை பேசுகிறார் மு.க. ஸ்டாலின்: சசிகலா குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளை மறந்துவிட்டு மு.க. ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா குற்றம்சாட்டியிருக்கிறார்.

Image caption உண்மைக்கு மாறான தகவல்களை பேசுகிறார் மு.க. ஸ்டாலின்: சசிகலா குற்றச்சாட்டு

அதிமுக பொதுச் செயலராகப் பதவியேற்ற பிறகு விடுத்திருக்கும் முதல் பொது அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்காக ஜெயலலிதா நடத்திய சட்டப்போராட்டத்தை மு.க. ஸ்டாலின் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென சசிகலா கூறியிருக்கிறார்.

தி.மு.க. உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசுதான், காளைகளைக் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இணைத்து அறிவிக்கையை வெளியிட்டது என்றும் அதன் காரணமாகவே ஜல்லிக்கட்டு நடத்தப்பட முடியவில்லை என்றும் சசிகலா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பல முறை இந்தியப் பிரதமரிடம் ஜெயலலிதா முறையிட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் சசிகலா, ஆனால், மத்திய அரசு முந்தைய அறிவிக்கையை மாற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையென்றும், உரிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவரவில்லையென்றும் சசிகலா கூறியிருக்கிறார்.

நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைச் சுட்டிக்காட்டியுள்ள சசிகலா, காங்கிரஸ் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் காரணமாகத்தான் ஜல்லிக்கட்டிற்கு தடை வந்தது என்றும் உண்மையை மூடிமறைக்கும் பணியில் ஸ்டாலின் ஈடுபட வேண்டாம் என்றும் சசிகலா கூறியிருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்