திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் சந்திக்க வேண்டிய முதல் சவால் எது?

திமுகவின் செயல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் சவால், அதிமுக அரசுக்கு எதிராக மக்கள் கருத்துக்களைத் திரட்டுவதுதான் என்று அரசியல் விமர்சகர் ஞாநி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை MKSTALIN
Image caption புதிய பொறுப்பு

ஸ்டாலின் தேர்வு குறித்து பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

"நடைமுறையில், திமுக ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. வயது காரணமாக, கருணாநிதி ஆலோசகராக இருக்கிறார். நடைமுறைத் தலைவராக ஸ்டாலின்தான் இருக்கிறார். அவரை தற்போது தலைவராகவே அறிவித்திருக்கலாம். அதில் எந்தத் தவறும் இருக்காது. ஆனால், கருணாநிதி இருக்கும் வரை, அவரே தலைவராக இருக்கட்டும் என்பதால் ஸ்டாலினை செயல் தலைவராக அறிவித்திருக்கிறார்கள்," என்றார் ஞாநி.

ஸ்டாலின் நியமினத்தால், பொதுமக்கள் மத்தியில் திமுகவால் எத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஞாநி, "மக்கள் பிரச்சனையில் திமுக எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதை ஏற்படுத்த முடியும். அதற்கான விளைவுகளை தேர்தல் நேரத்தில்தான் பார்க்க முடியும். அடுத்த ஒரு பரிசோதனையாக, உள்ளாட்சித் தேர்தலை சொல்லலாம்," என்றார்.

ஸ்டாலின் இனி எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்துக் கருத்து வெளியிட்ட ஞாநி, "மக்கள் பிரச்சனைகளில் அக்கறையோடு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கட்சித் தொண்டர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்," என்றார்.

கருணாநிதி மற்றும் ஸ்டாலின் இடையே அவர்களது செயல்பாடுகள் குறித்துக் கருத்து வெளியிட்ட ஞாநி, "கருணாநிதியிடம் இருக்கும் பேச்சாற்றல் மற்றும் ஆளுமைதான் வேறுபாடு. ஸ்டாலினிடம் அதற்கு இணையான ஆளுமையோ, பேச்சாற்றலோ கிடையாது. கட்சியை நடத்திச் செல்ல நடைமுறை உள்ளது. அந்த அடிப்படையில் நடத்திக் கொண்டு போகிறார்கள்," என்று தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதில், கருணாநிதிக்கு இருக்கும் பக்குவம், ஸ்டாலினுக்கு இல்லை என்ற கருத்து நிலவுவது குறித்துப் பேசிய ஞாநி, பல்வேறு தேர்தல்களில் தனியாக முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும்போது, அந்தப் பக்குவம் வந்துவிடும் என்றார்.

ஸ்டாலின் முன் இருக்கும் முதல் சவால், அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்டுவதுதான் என்று ஞாநி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை MKSTALIN
Image caption தந்தையிடம் ஆசி பெறும் மகன்

அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து, தவறான விடயங்களைக் கண்டித்து, அதற்கு எதிராக மக்களைத் திரட்ட வேண்டும். செயல் தலைவராக அப்படித்தான் செயல்பட வேண்டும் என்றார்.

கனிமொழி, அழகிரியால் சிக்கல் வருமா?

அதே நேரத்தில், கட்சிக்குள் ஸ்டாலினுக்கு வெறுப்போ சவாலோ கிடையாது என்றார் அவர். " அழகிரியை கட்சியிலிருந்து அனுப்பிவிட்டனர். கனிமொழி, அவருக்குக் கிடைக்கக்கூடிய அளவிலே திருப்திப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஏனெனில் அவருக்கு எதிராக 2ஜி வழக்கு இருக்கிறது. வழக்கு முடிந்த பிறகு பதவி பற்றி யோசிக்கலாம் என்று சொல்லப்படும். மாறன் சகோதரர்கள் வழக்குகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதனால், கட்சியில் அவருக்கு பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை," என்கிறார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து ஏற்பட்ட சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ள திமுக தவறிவிட்டது. குறிப்பாக, ஸ்டாலின் தவறிவிட்டார் என்ற விமர்சனம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஞாநி, "அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவோடு இருந்தவர். திரைக்குப் பின்னால் இருந்தவர் இன்று பகிரங்கமாக வந்திருக்கிறார். எனவே, அதிமுகவில் அதே தலைமைதான் தொடர்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். பொதுமக்கள், ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டதைப் போல சசிகலாவை ஏற்றுக்கொள்வார்களா என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியும். அந்த நேரத்தில், சசிகலாவை நிராகரித்து ஸ்டாலினை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை, திமுக அன்றைக்கு எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் முடிவாகும்," என்றார் அவர்.

தொடர்புடைய தலைப்புகள்