ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பாவின் மனு தள்ளுபடி

காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Image caption ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பாவின் மனு தள்ளுபடி

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் சசிகலா புஷ்பா கோரினார். மற்றொரு அமைப்பும் இதே போன்ற மனுவை தாக்கல் செய்தது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்தும், மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் அறிந்து கொள்ள தனக்கு உரிமையுள்ளது என்றும் சசிகலா புஷ்பா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Image caption சசிகலா புஷ்பா தொடுத்த மனு தள்ளுபடி

இன்று (வியாழக்கிழமை) இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லையென எனத் தெரிவித்து, இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அங்கு இது தொடர்பான தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மனுதாரர்களிடம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்

அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருபவர் சசிகலா புஷ்பா. இவருக்கும் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருக்கும் தில்லி விமான நிலையத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் உருவான சர்ச்சையையடுத்து சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்குவதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினராகவே சசிகலா புஷ்பா தொடர்ந்து வருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்