டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் மூன்று மாதங்களுக்கு வாகன அனுமதியில்லை

இந்திய தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கன்னாட் பிளேஸ் பகுதி, பிப்ரவரி தொடங்கி மூன்று மாதங்களுக்கு வாகனங்கள் ஓடாத பகுதியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AP

காற்று மாசுபாடு, நகரில் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை சமாளிப்பதற்கு எடுக்கப்படும் அரசின் திட்டங்களின் ஒரு பகுதியாக, அலுவலகங்கள் மற்றும் பல கடைகள் அமைந்திருக்கும் இந்தப் பகுதியில் பேருந்துகள் மற்றும் கார்கள் உள்பட எல்லா போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்படும்.

இந்த பகுதிக்கு செல்வோருக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் மிதிவண்டி சேவைகள் வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் கன்னாட் பிளேஸ் பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

பல அரசு கட்டடங்களையும், தற்போது மூத்த அதிகாரிகள் வாழுகின்ற சிறந்த மாளிகைகளையும் கட்டிய பிரிட்ஷ் கட்டடக்கலை நிபுணர் சர் எட்வின் லுட்யன்ஸின் பெயரால், லுட்யன்ஸ் டெல்லி என்று அழைக்கப்படும் இந்த பகுதி ஆங்கிலேய ஆட்சிக்கால டெல்லியின் பகுதியாகும்.

இந்தியாவின் பிரபல வணிகப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் பகுதி, அதிகரித்து வருகின்ற போக்குவரத்து நெரிசலால், பலரும் வந்து செல்வதற்கு இடையூறு நிறைந்ததாக காணப்படுகிறது.

போக்குவரத்து சுழற்சி, பாதசாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களின் அனுபவங்கள், தற்போது வாகன நிறுத்தும் இடங்களாக இருப்பவற்றை மீட்டெடுத்து மேலாண்மை செய்வது, இந்த பகுதியில் நிலவும் மக்கள் நெரிசல் ஆகியவற்றை சோதித்து அறிவதற்கு இந்த மூன்று மாத காலம் இங்கு வாகனமின்றி மக்கள் நடந்து செல்வது உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மெட்ரோ ரயில் அல்லது வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் பகுதி வரை வாகனத்தில் சென்று, குறிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்திவிட்டு செல்வது, மிதிவண்டி, அந்த சுற்றுவட்டாரத்திலுள்ள மின்சாரத்தால் இயங்குகின்ற வாகனங்களின் மூலம் இந்த மூன்று மாதங்களும் கன்னாட் பிளேஸ் பகுதிக்கு செல்லலாம்.

தொடர்புடைய தலைப்புகள்