திமுக இளைஞரணிச் செயலாளராக முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நியமனம்

படத்தின் காப்புரிமை Saminathan
Image caption மு.பெ.சாமிநாதன்

மு.க.ஸ்டாலின் வகித்து வந்த திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின், முன்பு இளைஞரணித் தலைவராகவும், அக்கட்சியின் பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் திமுக இளைஞரணியின் இணைச் செயலாளராக இருந்து வந்த தமிழகத்தின் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு, தற்போது திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதை அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், திமுக இளைஞர் அணிச் செயலாளராக கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வரும் மு.க.ஸ்டாலின், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதால், அவருக்கு பதிலாக, திமுக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக மு.பெ.சாமிநாதன், இளைஞர் அணி இணைச் செயலாளராக சுபா.சந்திரசேகர் ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே, நியமிக்கப்பட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்