என் காலில் யாரும் விழ வேண்டாம்: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் யாரும் தன் காலில் விழ வேண்டாம் என்றும், அது மனதளவில் பெரும் நெருக்கடியை உருவாக்குகிறது என்றும் தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை MKStalin
Image caption `தன்மானத்துக்கு எதிரானது'

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதாகவும், பணிச்சுமைகளுக்கு இடையில் இதுபோன்ற அன்பு மழையில் நனைவது சுமையை சுகமாக்குவதாகவும் கூறியுள்ளார்.

'நான் விரும்பவில்லை'

தன்னை நேரில் சந்திக்க வரும் கட்சித் தொண்டர்கள் காலில் விழுந்து வணங்க முயற்சிப்பது மனதளவில் பெரும் நெருக்கடியை உருவாக்குவதாகவும், இதனை தான் சிறிதும் விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு முதல் சவால் எது?

மேலும், இதனை பார்க்கும் மற்ற தொண்டர்களும் அதே முறையைக் கடைபிடிக்க நினைப்பது தனக்கு சற்றும் உடன்பாடில்லாத செயல் என்றும், சுயமரியாதைக் கொள்கை வழியில் தன்மானம் காக்கும் இந்த இயக்கத்திற்கும் எதிர்மறைச் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

அடிமை நிலை ஏற்படக்கூடாது

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை எந்த மனிதருக்கும், எப்போதும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை

இனிவரும் காலங்களில் காலில் விழுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும், இதனை ஆணையிடுவதாகக் கருத வேண்டாம் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டு கிடக்கிறது

இறுதியாக, வளைந்து குனிந்து தவழ்ந்து தரையில் உருண்டு கால்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்றும், நமக்கு அந்தப் பள்ளமான பாதை வேண்டாம் என்றும் ஆளும் கட்சியான அ.தி.மு.கவை சாடியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

தொடர்புடைய தலைப்புகள்