அரசியலில் நுழைவது குறித்து விரைவில் முடிவு: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேச்சு

அரசியலுக்கு வருவது குறித்து நல்ல நேரத்தில் முடிவை அறிவிப்பேன் என்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அ.தி.மு.க தொண்டர்களிடையே உரையாற்றியுள்ளார்.

படத்தின் காப்புரிமை @THANTHITV

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக காலமானார்.

இச்சூழலில், டிசம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவருடைய அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து எதுவும் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்தார் தீபா. இந்த நிலையில் தியாகராய நகரில் உள்ள அவருடைய வீட்டில் இன்று அவருடைய ஆதரவாளர்களிடம் தீபா பேசியுள்ளார்.

ஆதரவாளர்கள் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் என்றும், உரிய நேரத்தில் அரசியலில் நுழைவது பற்றி முடிவை அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

எம்.ஜி. ஆர் அவர்களின் வழியில் செயல்படுவோம் என்றும், ஜெயலலிதாவின் பெயரையும், புகழையும் நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், நல்ல பாதையில் நாளைய சமுதாயத்தின் வளர்ச்சியை பின்பற்றி தனது முடிவு இருக்கும் என்றும், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு மீண்டும் தலை வணங்குவதாகவும் தெரிவித்தார்.

உங்களுக்காக நான் விரைவில் பணியாற்ற காத்திருப்பதாக இறுதியாக ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.