தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மோதிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்

ஜெகதாப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று ( ஞாயிற்றுக்கிழமை)கைது செய்துள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி இந்திய பிரதமர் மோதிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை The India Today Group

மீனவர்கள் விடுதலை குறித்து பிரதமர் மோதிக்கு பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையிலிருந்து 51 தமிழக மீனவர்களை விடுவிக்கப்பட்டு அவர்கள் இன்னும் தமிழகம் வந்து சேராத நிலையில், அமைதியான முறையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொடுமையாகவும், அநியாயமாகவும் கைது செய்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெகதாப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து படகுகள் மூலம் கிளம்பிய 10 மீனவர்கள் இன்று ( ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை நேரத்தில் கைது செய்யப்பட்டதாகவும், மீனவர்களுக்கும் மற்றும் அவர்களுடைய படகுகளும் காங்கேசந்துறை மற்றும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழக அரசு மிகவும் கவலை அடைந்திருக்கிறது என்றும், 2016-ஆம் ஆண்டில் 290 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டி உள்ளார்.

மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுடைய வாழ்வாதாரமாக கருதப்படும் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் இன்னும் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்படாமல் இருக்கிறது என்பதை குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 118 படகுகள் போதிய கவனிப்பின்றி இலங்கையில் சேதமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது, இலங்கை சிறைகளில் உள்ள 20 மீனவர்களையும் மற்றும் இரு இயந்திர படகு உள்பட 118 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்குமாறு மோதிக்கு பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்