'பெட்ரோல் பங்குகளில் டெபிட் , கிரெடிட் அட்டைகள் ஏற்கப்படாது'

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சில வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் பெட்ரோல் பங்குகளில் பணப் பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Image caption உங்களிடம் இருப்பது எந்த வங்கி அட்டை?

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், ''ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் போன்ற சில வங்கிகள், பெட்ரோல் பங்குகளில் பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் தங்களின் பண மற்றும் கடன் (டெபிட் மற்றும் கிரெடிட்) அட்டைகளுக்கு 1% வரி விதிக்கப்போவதாக திடீரென அறிவித்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

''கடந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு, பெட்ரோல் பங்குகளில் பணமில்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வண்ணம் பண அட்டைகளை தேய்க்கும் இயந்திரங்களை (ஸ்வைப்பிங் இயந்திரங்கள்) நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் நிறுவியுள்ளோம்'' என்று முரளி குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் , பெட்ரோல் பங்குகளில் 5 முதல் 8 சதவீதம் மட்டுமே பணமில்லாத பரிவர்த்தனை நடந்து வந்த சூழலில், தற்போது 35 முதல் 45 சதவீதம் பணமில்லாத பரிவர்த்தனை, பண மற்றும் கடன் அட்டை மூலம் நடக்கிறது. இந்நிலையில் திடீரென சில வங்கிகள் தங்களின் பண மற்றும் கடன் (டெபிட் மற்றும் கிரெடிட்) அட்டைகளின் பணப்பரிமாற்றத்துக்கு 1% வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது அவர்கள் கூடுதல் லாபத்தை உத்தேசித்து செய்த நடவடிக்கை என்று முரளி மேலும் குறிப்பிட்டார்.

''இதனால் எங்களின் வருவாய் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். எங்களால் பெட்ரோல் பங்க்கை நடத்த முடியாத சூழல் ஏற்படும்'' என்று தெரிவித்த முரளி, இதனால் இவ்வங்கிகளின் பண மற்றும் கடன் அட்டைகள் மற்றும் இந்த வங்கிகளை போல பணப்பரிமாற்றத்துக்கு வரி விதிக்கும் வங்கிகளின் பண மற்றும் கடன் அட்டைகளை தாங்கள் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

மேலும், இந்த வகை பணப்பரிமாற்றத்தால் தங்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் தாமதமாக கிடைப்பதாக முரளி குற்றம்சாட்டியுள்ளார்.

திடீரென இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு, இன்று முதல் இந்த வரி அமல்படுத்தப்படும் என்று வங்கிகள் அறிவித்து, தங்களால் பேச்சுவார்த்தைக்கு ஈடுபட கால அவகாசம் அளிக்காதது சரியல்ல என்றும் முரளி குற்றம்சாட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.

ஆரம்பத்தில், பொது மக்களின் நலன் கருதி பழைய 500 ரூபாய் நோட்டு பெட்ரோல் பங்குகளில் நவம்பர் மாதம் 24-ஆம் தேதி வரை பெறப்பட்டது. பின்னர், இந்த கால அவகாசம் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதன் பின்னர், பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்து வந்த நிலையில், நாளை திங்கட்கிழமை முதல் பெட்ரோல் பங்குகளில் சில குறிப்பிட்ட டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதை ஏற்க இயலாது என்று பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்னனர்.

தொடர்புடைய தலைப்புகள்