டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் உறுப்பினர் நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த டிசம்பர் 22-ஆம் தேதியன்று, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த வழக்கில், இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை), இம்மேல்முறையீடு வழக்கில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டதை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த 11 பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தியை மட்டும் மீண்டும் தேர்வு செய்யக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்யும் அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இயங்கி வருகிறது.

முன்னதாக, இந்தத் தேர்வாணயத்திற்கு 11 உறுப்பினர்களை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று தமிழக அரசு நியமித்தது.

ஆர். பிரதாப் குமார், வி. சுப்பைய்யா, எஸ். முத்துராஜ், எம். சேதுராமன், ஏ.வி. பாலுசாமி, எம். மாடசாமி, வி. ராமமூர்த்தி, பி. கிருஷ்ணகுமார், ஏ. சுப்பிரமணியன், என்.பி. புண்ணியமூர்த்தி, எம். ராஜாராம் ஆகிய பதினொரு பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் நியமித்தார்.

இந்த நியமனங்களை எதிர்த்து, தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

தகுதியில்லாதவர்கள், அரசியல்சார்பு உள்ளவர்கள் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தங்களது மனுக்களில் குற்றம் சாட்டியிருந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்