உதய் திட்டத்தில் இணைந்தது தமிழ்நாடு

இந்தியாவில் மின் வாரியங்களின் கடன்களைச் சீரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'உதய்' எனப்படும் உஜ்வல் டிஸ்காம் அஸ்யூரன்ஸ் திட்டத்தில் தமிழ்நாடு இன்று (திங்கள்கிழமை)இணைந்துள்ளது.

Image caption உதய் திட்டத்தில் இணைந்தது தமிழ்நாடு

ஆனால், இது தமிழகத்தின் நிதிநிலையைக் கடுமையாக பாதிக்கும் என்று மின்துறை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

2015-இல் துவக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் 21வது மாநிலமாக தமிழ்நாடு தற்போது இணைந்துள்ளது.

மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் புதுதில்லியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசு, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோவின் விநியோகம் தொடர்பான கடனில் 75% கடன் தொகையான ரூ.30,420/- கோடியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென உதய் திட்டம் கூறுகிறது. இதில் 22815 கோடி ரூபாயை மாநில ஏற்கும் எனவும் மீதமுள்ள கடனுக்கு டான்ஜெட்கோ கடன் பத்திரங்களை வெளியிடுமென்றும் மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி தில்லியில் இன்று தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, மின் விநியோகத்தை நவீனமாக்குதல், விநியோகத்தில் ஏற்படும் இழப்பைக் குறைத்தல் ஆகியவற்றுக்கும் இந்தத் திட்டம் இலக்குகளை நிர்ணியிக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணையும் தமிழக மின் வாரியத்திற்கு வட்டித் தொகையில் சேமிப்பு உள்ளிட்ட வகையில் பதினோராயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயன் இருக்கும் என மத்திய அரசு கூறுகிறது.

மின்வாரியத்தின் கடனை மாநில அரசு ஏற்பதால், மின்வாரியத்திற்கும் மாநில அரசுக்கும் பல்வேறு திட்டங்களின்கீழ் மத்திய அரசு ஊக்கத்தொகைகளை வழங்கும்.

கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு, மத்திய மின் தொகுப்பிலிருந்து குறைந்த விலையில் மின்சாரம் போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.

இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்களின் மொத்தக் கடன் 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இந்தக் கடன்களிலிருந்து மின்விநியோக நிறுவனங்களை விடுவித்து, அவற்றை சிறப்பாக இயங்கச் செய்யவே இந்தத் திட்டத்தை வடிவமைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

உதய் திட்டம் குறித்து ஜெயலலிதா தெரிவித்த விமர்சனங்கள்

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் இந்தத் திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

இது தொடர்பாக அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விடுத்த அறிக்கையில், இந்தத் திட்டம் உண்மையிலேயே தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டமா என்றால், இல்லை என்பதே பதிலாகும் என்று கூறினார்.

தனியார் மின் நிறுவனங்கள் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், மாநில மின்வாரியங்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அவற்றை வாங்க முடிவதில்லை. அதனால் தனியார் மின் நிறுவனங்களால் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அவை, வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடிவதில்லை. அதனால், அந்தக் கடன்கள் வங்கிகளுக்கு சுமையாக மாறுகின்றந. ஆகவே, மின் வாரியங்களின் நிதிநிலையை சீர்செய்து, மின்சாரத்தை வாங்கவைத்து தனியார் மின் நிலையங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்த வைப்பதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இது உண்மையில் தனியார் மின் நிலையங்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் திட்டம் என நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

இந்தத் திட்டம் தொடர்பாக ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் பல்வேறு சலுகைகளைக் கோரியிருந்தார். தவிர, மாநில அரசு ஏற்கும் 75 சதவீத கடனில் 25 சதவீதத்தை மத்திய அரசு மானியமாகத் தர வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு எந்தப் பதிலும் சொல்லாத நிலையில், இது மக்களின் வயிற்றில் அடிக்கும் திட்டம் என நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியிருந்தார்.

இன்று தமிழகம் இந்த உதய் திட்டத்தில் இணைந்து தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகம் கோரிய சலுகைகள் தொடர்பாக எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை.

இந்தத் திட்டம் மாநில அரசின் நிதிநிலையைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள் மின்துறை ஆர்வலர்கள்.

'தமிழகம் ஏற்கனவே பெருமளவில் கடனில் தள்ளாடுகிறது. இந்நிலையில் இந்தக் கடனையும் ஏற்றுக்கொண்டால், சமூகநலத் திட்டங்களை மாநில அரசு குறைக்க வேண்டியிருக்கும். இது எளிய மக்களைக் கடுமையாக பாதிக்கும்' என்று தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி தெரிவித்தார் .

கடன்களை மாநில அரசு ஏற்பதால், மின்வாரியங்கள் மீண்டும் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கி, மீண்டும் கடன் சுமையை அடையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்