ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

படத்தின் காப்புரிமை Getty Images

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கமிஷனை வைத்து விசாரணை நடத்த வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் முழுமையான தகவல்களை வெளியிடவில்லை எனவும் ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து ஆராய வேண்டுமெனவும் கருத்துத் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குத் தொடர்ந்திருப்பவர் ஜெயலலிதாவுக்கு ரத்த உறவு அல்ல. இப்படி ஒவ்வொருவராக, தனிநபர்களின் சிகிச்சை விவரங்களைக் கேட்டால் எப்படித் தர முடியும் எனக் கேள்வியெழுப்பினார்.

ஜெயலலிதா தனிநபரல்ல என்றும் அவர் மாநிலத்தின் முதல்வர்; மேலும் அ.தி.மு.கவின் தலைவர். அக்கட்சியின் தொண்டர் என்ற வகையிலும் அவருக்கான சிகிச்சை விவரங்களைக் கேட்பதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.

நீதிமன்றத்திற்கு, சீலிட்ட உறையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களைத் தரத் தயாராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பு நீதிபதிகளிடம் தெரிவித்தது.

இந்த வழக்கில் பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டுமென மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் கோரியதால் பிப்ரவரி 23 தேதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்