பொங்கல் விடுமுறை குறித்து தமிழ்நாட்டில் சர்ச்சை

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய விடுமுறை பட்டியலில் இடம்பெறாததற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர். ஆனால், இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் என்கிறது பாரதீய ஜனதா கட்சி.

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 17 நாட்கள் கட்டாய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகின்றன. இவற்றில் 14 நாட்கள் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகின்றன.

இது தவிர, 12 பண்டிகைகளைக் கொண்ட பட்டியலிலிருந்து மீதமிருக்கும் 3 நாட்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தத் தேர்வை அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு செய்கிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான 17 நாட்களைக் கொண்ட கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் இடம்பெறவில்லை.

ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள திமுக

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.கே. ரங்கராஜன், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பொங்கல் தினத்தை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இணைக்க வேண்டுமெனக் கோரி மத்திய தொழிலாளர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கடிதம் ஒன்றை நேற்று (திங்கள்கிழமை) அனுப்பினார்.

இதையடுத்து இந்த விவகாரம் தமிழக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் பொங்கலை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன. தி.மு.க. இது தொடர்பாக புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள எல்லா மத்திய அரசு அலுவலகங்களிலும் பொங்கல் தினத்திற்கு விடுமுறை தினமாக அறிவிக்க வகை செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவு இதற்கென போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.

'தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது'

ஆனால், இதில் சில கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் தினம் இல்லை எனக் கூறியிருக்கிறார். தவறுதலாக யாரோ பரப்பியதை நம்பி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கடந்த பல ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இல்லை என்று குறிப்பிட்டார்.

தவறான தகவலை வைத்துக்கொண்டு பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரான பிரச்சாரம் தமிழகத்தில் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். 12 விடுமுறைகளைக் கொண்ட பட்டியலில் இருந்து விடுமுறைகளைத் தேர்வு செய்வது மாநில ஒருங்கிணைப்புக் குழு என்றும், அதற்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை இரண்டாவது சனிக்கிழமையன்று வரும் நிலையில், அந்த நாள் ஏற்கனவே விடுமுறை நாளாக இருப்பதால், ஒருங்கிணைப்புக்குழு கூடுதல் விடுமுறை கிடைக்கும் வகையில் வேறொரு பண்டிகையைத் தேர்வு செய்திருப்பதாக அவர் கூறினார்.

மேலும் கடந்த 2012-ஆம் ஆண்டிலும் இதே போல பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இல்லாததை சுட்டிக்காட்டிய அமைச்சர், அப்போது யாரும் போராட்டம் நடத்தவில்லை என்றும் கூறினார்.

'அரசுக்கு எதிரான போராட்டமல்ல'

இது தொடர்பாக இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கும் மத்திய ஊழியர் மகா சம்மேளனத்தின் செயலாளர் துரைப்பாண்டியன், தமிழக ஒருங்கிணைப்புக் குழு விடுமுறையை முடிவு செய்வதில் தான் தவறு நேர்ந்துவிட்டதாகவும் தங்களது போராட்டம் அரசுக்கு எதிரானதல்ல என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழக தலைவர் சந்தோஷிடம் இது தொடர்பாக கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்