ஜல்லிக்கட்டு விவகாரம்: திமுக மீது ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாத நிலை ஏற்பட்டதற்கு தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

Image caption திமுக மீது ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடப்பதை நிச்சயம் உறுதி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொங்கல் திருநாளை ஒட்டி காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமென கோரி போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு எப்படி மத்திய அரசுகளாலும் நீதிமன்றத்தாலும் தடை விதிக்கப்பட்டது என்பதை விரிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

'காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் காளைகளை இணைத்தது காங்கிரஸ் ஆட்சியில்'

முடிவாக, தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அதாவது 2011-ஆம் ஆண்டில், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் கரடிகள், புலிகள் ஆகியவற்றோடு காளைகளயும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இணைத்தது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்த உத்தரவின் அடிப்படையிலேயே 2014-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இந்திய உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடையை விதித்தது என்று பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். மேலும், தி.மு.க. ஆட்சியில் 2009-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்திருப்பதாகவும் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு தான் இந்தத் தடைக்குக் காரணம் என்றும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை JSURESH
Image caption கோப்புப் படம்

மேலும், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதை தமிழக அரசு நிச்சயம் உறுதி செய்யுமென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

பிரதமர் அலுவகத்தில் மனு அளித்த அதிமுக எம்பிக்கள்

இதற்கு முன்பாக, ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக, விலங்குகள் துன்புறுத்துதல் தடைச் சட்டத்தைத் திருத்தி, காட்சிப் படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கும்படி கோரியிருந்தார்.

மேலும், இன்று அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ தவேவைச் சந்தித்து இந்தப் பிரச்சனை தொடர்பாக மனுக்களை அளித்தனர். பிரதமர் அலுவலகத்திலும் மனுக்களை அளித்தனர்.

படத்தின் காப்புரிமை J SURESH
Image caption தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா?

'மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது'

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார். காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தை மீறி செயல்படும் மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைக் கைகாட்டுவதாக குற்றம்சாட்டினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்