சிவகங்கை: காவல்துறையுடனான மோதலில் ஒருவர் சுட்டுக் கொலை

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார்த்திகைசாமி என்பவர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

புதன்கிழமையன்று காலையில், காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மீது 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கும்பல் ஒன்று தங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, ஊழியர்களைத் தாக்கி பணத்தையும் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டதாக வந்த தகவலையடுத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கார்த்திகை சாமியை உள்ளடக்கிய ஆறு பேர் பயணம் செய்த வாகனம் சோதனைச் சாவடியை நிற்காமல் கடந்து சென்றது. இதையடுத்து, சிவகங்கை நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற காவலர் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றதாகவும் அப்போது அந்தக் கும்பல் காவலரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தரப்பு கூறுகிறது.

இதையடுத்து தப்பிச்சென்றவர்களைப் பிடிக்க களமிறங்கிய காவலர்கள், மானாமதுரைக்கு அருகில் உள்ள தோப்புப் பகுதியில் கார்த்திகைசாமியை சுட்டுக்கொன்றனர். தலையில் காயமடைந்த காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்