எச்சரித்த சுஷ்மா ஸ்வராஜ்; பணிந்தது அமேசான் நிறுவனம்

இணைய சில்லறை விற்பனை பெருநிறுவனமான அமேசானின் கனடா நாட்டு இணையதளத்தில் இந்திய தேசிய கொடிகளின் படங்களைக் கொண்ட கால் மிதி விரிப்புகள் (டோர் மேட்) விற்கப்படுவது கண்டறியப்பட்ட உடன் அந்நிறுவனத்தை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய கால் மிதி விரிப்புகளை இணையத்தலிருந்து அகற்றியது அமேசான்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமேசான் நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று ட்விட்டரில் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் அந்த டோர் மேட்டுகளை இணைய விற்பனையிலிருந்து திரும்பப் பெறுவது மட்டுமின்றி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று ட்விட்டரில் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கோராத பட்சத்தில், இந்தியாவில் உள்ள அமேசான் அதிகாரிகளின் நடப்பு விசாக்கள் ரத்து செய்யப்படும் என்றும், இனி அமேசான் அதிகாரிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption அமேசான் நிறுவனத்திற்கு சுஷ்மா ஸ்வராஜ் கடும் எச்சரிக்கை

அந்த சர்ச்சைக்குரிய டோர் மேட்டுகளை தங்களது இணைய விற்பனையிலிருந்து எடுத்துவிட்டதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய கால் விரிப்பைப் பற்றி மற்றொரு ட்விட்டர் பயன்பாட்டாளர் சுஷ்மா ஸ்வராஜிடம் ட்விட்டர் மூலம் தெரிவித்ததை தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் இந்த விவகாரத்தை அமேசான் நிறுவனத்திடம் கொண்டு செல்லும்படி சுஷ்மா ஸ்வராஜ் தன்னுடைய தொடர் ட்வீட்களில் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்