மோதியால் காதி விற்பனை அதிகரிப்பு : காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணைய தலைவர்

இந்திய காதி மற்றும் கிராம தொழில் துறை ஆணையத்தின் அதிகாரபூர்வ நாள்காட்டியில் இருக்கும் ராட்டை சுற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை மாற்றிவிட்டு, இந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அதே பாணியில் ராட்டை சுற்றுவது போல இருக்கும் புகைப்படங்களை அச்சிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக மோதியின் படம் வெளியானதை தமிழகத்தை சேர்ந்த மூத்த காந்தியவாதியும், தமிழ்நாடு காந்தி ஸ்மரக் நிதியின் தலைவரும் கே.எம்.நடராஜன் கண்டித்துள்ளார்.

அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில்,''காந்தியை அகற்றிவிட்டு வேறு யாராலும் கதருக்கு புத்துயிர் கொடுக்க முடியாது,'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய கதர் மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா பிரதமர் மோதியின் படங்களை வெளியிட்டதால் எந்தத் தவறும் இல்லை என்றும் மோதியின் படத்தை வெளியிட்டதால் காதி பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

''இது வரை எங்களது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நாள்காட்டியில் காந்தியை தவிர யாருடைய படமும் வெளியானது இல்லை. 1996,2002,2005,2011,2013 ஆகிய ஆண்டுகளில் காந்தியின் படம் இல்லாமல் அவரது கருத்துக்கள் அடங்கிய நாள்காட்டியை வெளியிட்டோம். ஆனால் மற்ற எந்த பிரதமரைக் காட்டிலும் பிரதமர் மோதிக்கு, காதி மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாள்காட்டி வெளியாகியுள்ளது,'' என்றார் வினய் குமார் சக்சேனா.

அவர் மேலும், ''இளைஞர்களை ஈர்க்கும் நபராக மோதி உள்ளார். அவரால் காதி விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது,''என்றார்.