தடையை மீறி பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், பாலமேடு, சிங்கம்புணரி போன்ற பகுதிகளில் தடையை மீறி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image caption தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு

இது குறித்து பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஆறுமுகம் பிபிசி தமிழோசையிடம் தெரிவிக்கையில், இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 7. 30 மணி அளவில் இருந்து மக்கள் வீதிகளில் கூடி ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்'' என்று தெரிவித்தார்.

''போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தங்கள் காளைகளை கூட்டத்திற்குள் அவிழ்த்து விட்டனர். போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்ட போதிலும், எங்களின் போராட்டம் தொடரும். தடையை மீறுவதற்கோ, கைதாவதற்கோ நாங்கள் அஞ்சவில்லை'' என்று ஆறுமுகம் மேலும் தெரிவித்தார்.

மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் நேற்று (சனிக்கிழமை) காலை ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கக்கோரி தடையை மீறி பேரணி நடத்தப்பட்டு இருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், இயக்குனர் கெளதமன் மீதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை தான் கண்டிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு மத்திய , மாநில அரசுகள் மற்றும் பீட்டா அமைப்பு ஆகியவை தான் காரணம் என்று குற்றம்சாட்டிய ஆறுமுகம், இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ''தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் ஆணையை கர்நாடக மாநில அரசு செயல்படுத்தாத போதிலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?'' என்று வினவினார்.

காளைகள் அல்ல; எங்களது உடன்பிறப்புகள்

''காளைகள் என்றோ மாடு என்றோ அழைப்பதை விட, அவற்றை எங்களின் உடன்பிறப்புகளாகவே கருதுகிறோம். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதை நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதுகிறோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, பாலமேடு கிராமத்தில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வண்ணம் ஏராளமான அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாலமேட்டில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தங்கள் காளைகளை கூட்டத்திற்கு அவிழ்த்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.

இதே போல், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்