உத்தரப்பிரதேசம்: அகிலேஷ் யாதவ் ‘சைக்கிள்’ சின்னம் பெற்றார்

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிபிரிவுக்கு ஓதுக்கிடு செய்து இந்திய தேர்தல் ஆணையம்இன்று (திங்கள்கிழமை)உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption அகிலேஷ் யாதவ் பிரிவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ''தேர்தல் நோக்கங்களுக்கு சமாஜ்வாதி கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமை அகிலேஷ் யாதவ் பிரிவுக்கு தான் உள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

மூன்று முறை உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்தவரும், தனது தந்தையுமான முலாயம் சிங் யாதவிடம் சமாஜ்வாதி கட்சியின் தலைமைக்கும், கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கும் உரிமை கோரி போராடி வந்த அகிலேஷ் யாதவுக்கு, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பெரும் பலத்தை தரும் என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அகிலேஷ் யாதவ் பிரிவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு எவ்வாறான தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்து உத்தரப்பிரதேச அரசியலைக் கூர்ந்து கவனித்து கட்டுரைகள் எழுதியவரும், ஊடகவியலாளருமான வித்யா சுப்ரமணியம் பிபிசி தமிழோசையிடம் தெரிவிக்கையில், '' பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தன் வசம் வைத்துள்ளதால் அகிலேஷ் யாதவின் தரப்புக்கு கட்சியின் சைக்கிள் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது அகிலேஷ் யாதவின் தரப்புக்கு நிச்சயம் பலம் அளிக்கும்'' என்று தெரிவித்தார்.

''ஆனால் , இது வரவிருக்கும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பாதிக்குமா என்பது குறித்து உறுதியாக கூற இயலாது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ் யாதவ் பிரிவுக்கும், முலாயம் சிங் யாதவ் பிரிவுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் ஏற்பட்ட வண்ணமிருந்தன.

கடந்த டிசம்பர் 30-ஆம் தேதியன்று, உத்தரப் பிரதேச மாநில முதல்வரான அகிலேஷ் யாதவை சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்குவதாக, அவரது தந்தையும், கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் அறிவித்தார்.

ஆனால், அதற்கு அடுத்த நாளே, அகிலேஷை முலாயம் சிங் யாதவ் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption அகிலேஷ் யாதவ் பிரிவுக்கும், முலாயம் சிங் யாதவ் பிரிவுக்கும் தொடர்ந்து கருத்துவேறுபாடு

இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதியன்று நடந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாநாட்டில் அகிலேஷ் தரப்பால் ஷிவ்பால் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் நீக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமாஜ்வாடி கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அகிலேஷ் தரப்பினர் கட்சி சின்னமான சைக்கிள் சின்னத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று, முலாயம்சிங் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று சைக்கிள் சின்னம் தனது தலைமையிலான கட்சிக்கு உரியது என்று கூறி மனு கொடுத்தார்.

இந்நிலையில், இன்று சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி பிரிவுக்கு ஓதுக்கிடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.