அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குக்காக நேற்று(திங்கள்கிழமை)காலை முதல் போராடிவந்தவர்களை கைதுசெய்து காவல்துறை அப்புறப்படுத்தியுள்ளது.

Image caption போராட்ட களமாக மாறிய அலங்காநல்லூர்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருக்கும் நிலையில், பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும் தினமான நேற்று (திங்கள்கிழமை ) , ஆயிரக்கணக்கானவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் அங்கு குவிந்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஊர் முழுவதும் வீடுகளில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. உள்ளூர் மக்கள் சிறிய அளவில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் அலங்காநல்லூரில் குவிய ஆரம்பித்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமென போராட ஆரம்பித்தனர். வாடி வாசலிலிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள திடலில் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கையோடு இரு சக்கர வாகனப் பயணம் மேற்கொண்ட மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் அந்தத் திடலில் அமர்ந்து போராடத்தில் ஈடுபட்டனர்.

இதற்குப் பிறகு, அந்தத் கூட்டத்தில் புதிதாக போராட்டக்காரர்கள் இணைவது தடுக்கப்பட்டது. அலங்காநல்லூரை நோக்கிவரும் சாலைகள் அனைத்திலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதையும் மீறி சிறுசிறு ஊர்வலங்களாக அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள், கைது செய்து அகற்றப்பட்டனர்.

ஆனால், வாடிவாசலக்கு அருகில் அமர்ந்து போராடியவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டனர். மாலை ஐந்து மணிக்குப் பிறகு, போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்ல வேண்டும் என உள்ளூர் விழாக் குழுவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்குப் பிறகு போராட்டக்காரர்கள் ஏதும் பேசமுடியாத வகையில் அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பெரிய ஒலிபெருக்கிகளில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. மேலும், மீண்டும் மீண்டும் அலங்காநல்லூர் பொதுமக்கள் போராட்டக்காரர்களைக் கலைந்துசெல்லும் வகையில் வலியுறுத்தினர்.

ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடி வாசல் வழியாக சில காளைகளையாவது அவிழ்த்துவிட்டால் தான் அங்கிருந்து செல்வோம் என அவர்கள் கோரிவந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் போராட்டக்காரர்களை காவல்துறை கைதுசெய்து அகற்றப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட மாட்டாது என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டுதான் சமூக வலைதளங்களின் மூலம் பெரிய அளவில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அலங்காநல்லூரில் திரண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்