பிப்ரவரி 24-ஆம் தேதியன்று எனது அரசியல் திட்டம் குறித்து அறிவிப்பேன்: தீபா

மறைந்த தமிழக முதல்வரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் தனது அரசியல் பயணம் திட்டம் குறித்து விரிவாக தெரிவிக்கவுள்ளதாக வெளியிடப் போவதாக ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை @THANTHITV
Image caption 'பிப்ரவரி 24-ஆம் தேதியன்று எனது அரசியல் திட்டம் குறித்து அறிவிப்பேன்'

இன்று ( செவ்வாய்க்கிழமை) தனது மக்கள் நலப் பணி குறித்து தெரிவிக்கப் போவதாக தெரிவித்திருந்த தீபா , செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார், அப்போது அவர் ''எனக்கு ஆதரவு தந்த மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும், ஊடகங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று தனது நன்றிகளை தெரிவித்தார்.

''பெரியார், அண்ணா, எம். ஜி. ஆர் ஆகியோரை பின்பற்றி மக்கள் நலப் பணியில் தன்னை அர்ப்பணித்த ஜெயலலிதா, தமிழக மக்களை தன் பிள்ளைகளாக ஏற்று வாழ்ந்தார். அதனாலே மக்களால் ' அம்மா' என்றழைக்கப்பட்டார்'' என்று நினைவுகூர்ந்த தீபா, எம். ஜி. ஆரின் மறைவுக்கு பின்னனர் அதிமுகவை வழிநடத்தி பல வெற்றிகளை ஈட்டித் தந்தவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, ''ஜெயலலதாவின் மரணத்துக்கு பின்னர்,அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் இந்நாட்டு மக்கள் பலரும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எனக்கென்று குடும்பம் என சில பொறுப்புகள் உண்டு. ஆனாலும், என் மீது நம்பிக்கை வைத்து நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்னை அழைத்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று தீபா கூறினார்.

''என் வாழ்நாளை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து, எம் .ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பாதச் சுவடுகளை பின்பற்றி நான் மக்கள் பணியில் மேற்கொள்ள இருக்கிறேன்.'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தீபா, '' நான் ஏற்கனவே அரசியலில் தான் உள்ளேன். நீண்ட ஆலோசனை நடத்தி, மக்களுடன் கலந்துரையாடி, ஜெயலலிதாவின் பிறந்த நாள் தினமான பிப்ரவரி 24-ஆம் தேதியன்று எனது அரசியல் பயணம் குறித்து விரிவாக அறிவிப்பேன்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார்.

இச்சூழலில், டிசம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவருடைய சகோதரர் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபா புதிய அரசியல் கட்சியை தொடங்க வேண்டுமென வலியுறுத்தி அவரது வீட்டின் முன்பாக சில அதிமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரண்ட வண்ணமிருந்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்