திருக்குறளுடன் தொடங்கி எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டிய தீபா

தனது மக்கள் பணி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய ஜெயலலிதாவின் சகோதரர் மகள்தீபா தனது உரையில், காலஞ்சென்ற தமிழக முதல்வரும், தனது அத்தையுமான ஜெயலலிதாவை போல எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.

படத்தின் காப்புரிமை @THANTHITV
Image caption திறக்குறளுடன் தொடங்கி எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டிய தீபா

இன்று ( செவ்வாய்க்கிழமை) தனது மக்கள் நலப் பணி குறித்து தெரிவிக்கப் போவதாக தெரிவித்திருந்த தீபா , செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்,

’அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற திருக்குறளுடன் தனது உரையை தொடங்கிய தீபா, தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி உரையாடினார்.

மேலும், அவர் கூறுகையில், எம்ஜிஆரின் சினிமா பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். "மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா, மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா" என்ற பாடலை மேற்கோள் காட்டிய தீபா, இப்பாடலில் கூறப்படுவதை போல ஏழைகளின் காவலனாக விளங்கிய எம். ஜி,. ஆர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளில் தனது வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்க போவதாக தெரிவித்தார்.

இதற்கு முன்பு, பல சந்தர்ப்பங்களில் எம்ஜிஆர் பாடல்களை மேற்கோள் காட்டி பொதுக் கூட்டங்களிலும், அதிமுக பொதுக்குழுவில் காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எந்த சந்தேகமுமில்லை

''உடல் நலமின்றி இரண்டரை மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மரணம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.'' என்று தீபா தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகங்கள் குறித்து கேட்கப்பட்டதற்கு, இது குறித்து தனக்கு எந்த சந்தேகமும் இல்லையென்றும், அவர் நோய்வாய்ப்பட்டுத் தான் இறந்தார் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

தனக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையேயான உறவு ஒரு தாய்- மகள் உறவு போன்றது என்றும், தான் யாருடைய சொத்துக்கும் ஆசைப்படவில்லை என்று தெரிவித்தார்.

தமிழகத்தை ஆசியாவிலேலேயே சிறந்த மாநிலமாக ஆக்க வேண்டும் என்று அனைவரும் பாடுபட வேண்டும் என்று தீபா தனது பேச்சில் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்