டிஜிட்டல் மறு பதிப்பு: இளம் ரசிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பா?

காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு நேற்று செவ்வாய்க்கிழமைதமிழகத்தில் உள்ள சில திரைஅரங்குகளில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது.

படத்தின் காப்புரிமை PADMINI PICTURES
Image caption மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு

எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் தொடக்க விழாவையொட்டி, சென்னையில் சில திரையரங்களிலும் மற்றும் கோவையில் சில திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது மறு பதிப்பு செவ்வாயன்று வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில், 1965-இல், பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான மிகப் பெரிய வெற்றித் திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

இத்திரைப்படம் இன்று சிறப்பு திரையிடப்படும் சூழலில், திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்படுவதன் நோக்கம் குறித்து நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறுகையில், ''பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்படுவது வயதானவர்களுக்கு அவர்களின் பழைய நினைவை கிளறுவதாகவும், இளைஞர்களுக்கு பழைய திரைப்படங்களின் பெருமைகளை, சாதனைகளை பார்க்க ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது'' என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ''டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்பட்ட திரைப்படங்களில் 'கர்ணன்' மிக வெற்றிகரமாக ஓடியது. இதற்கு முன்பாக, 2014-இல் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்பட்ட ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படமும் வெற்றி பெற்றது. 'பாசமலர்' திரைப்படம் சரியாக போகவில்லை. 'திருவிளையாடல்' திரைப்படம் சரியான முறையில் வெளியீடு செய்யப்படாததால், அது வெற்றி பெறவில்லை'' என்று தெரிவித்தார்.

மகத்தான வெற்றி பெற்ற 'கர்ணன்' டிஜிட்டல் மறு பதிப்பு

படத்தின் காப்புரிமை DIVYA fILMS
Image caption மகத்தான வெற்றி பெற்ற 'கர்ணன்' டிஜிட்டல் மறு பதிப்பு

டிஜிட்டல் மறு பதிப்புகளுக்கு பெரும் செலவாகாது. ஆனால், எந்த வகை திரைப்படங்களை மறுபதிப்பு செய்தால் மக்களை கவரும் என்று நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஒய். ஜி. மகேந்திரன் குறிப்பிட்டார்

''ஆரம்பத்தில் 'கர்ணன்' திரைப்படம் மறு பதிப்பு செய்யப்பட்ட போது, பலரும் இந்த முயற்சி வெற்றி பெறாது என்று கூறினார்கள். ஆனால், இது வெற்றி பெற்ற பின்னர், பலரும் வியப்பில் ஆழ்ந்தனர், இப்படம் 150 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது'' என்று 'கர்ணன்' திரைப்படம் மறு பதிப்பு செய்யப்பட்டு வெற்றி பெற்றது குறித்து அவர் குறிப்பிட்டார்.

’உத்தம புத்திரன்’, மாறுபட்ட கண்ணோட்டத்தோடு வெளியான ’புதிய பறவை’ ஆகிய திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்படுவது தனது விருப்பம் என்று ஒய். ஜி. மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.

Image caption அபிமான நடிகர்களின் திரைப்படங்களுக்கு என்றும் ஆதரவளிக்கும் ரசிகர்கள்

'லாரன்ஸ் ஆஃப் அரேபியா'

'லாரன்ஸ் ஆஃப் அரேபியா' போன்ற பல ஹாலிவுட் திரைப்படங்கள் வெற்றிகரமாக டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளன. பாலிவுட்டிலும் முகல் இ - ஆஸாம் போன்ற திரைப்படங்கள் டிஜிட்டல் மறு பதிப்பு செய்யப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றது.

தமிழில் இன்னமும் பரவலாக டிஜிட்டல் மறு பதிப்பு வெளிவராதது ஏன் என்று திரைப்பட ஆய்வாளர் மற்றும் விமர்சகரான வெற்றி, பிபிசி தமிழோசையிடம் விளக்கினார்.

''பல திரைப்படங்களின் நெகட்டிவ் பதிப்புகள் இங்கு பராமரிக்கப்படுவதில்லை. மற்ற இடங்களில் நெகட்டிவ் பிரிண்ட்கள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. நடிகர் கமல்ஹாசன் போன்றோர் அனைத்து திரைப்படங்களும் டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்'' என்று வெற்றி நினைவு கூர்ந்தார்.

டிஜிட்டல் மறு பதிப்பு தொழில்நுட்ப அம்சங்கள்

டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் எவ்வாறு மறு பதிப்பு செய்யப்படுகிறது என்பது குறித்து வெற்றி கூறுகையில், '' பழைய திரைப்படங்களின் இமேஜ் நெகடிவ் (படம்) மற்றும் சவுண்ட் நெகட்டிவ் (ஒலி) ஆகிய இரண்டின் தரமும் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு படம், படமாக தரம் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு படத்திலும் உள்ள சிறிய கீறல்களும் அகற்றப்படும். ஒலியும் அவ்வாறே, ஒவ்வொரு பகுதியாக மேம்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

விரைவில் வெளியாகவுள்ள ’பாட்சா’ திரைப்படத்தின் ஒலி மறு பதிவு செய்யப்பட்டு வெளியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Image caption கடுமையான தர மேம்படுத்தலுக்கு உள்ளாகும் டிஜிட்டல் மறு பதிப்புகள்

டிஜிட்டல் மறு பதிப்புக்கு ஆகும் செலவுகள்

திரைப்படங்களை டிஜிட்டல் மறு பதிப்பு செய்வதற்கு ஆகும் செலவுகள் குறித்து குறிப்பிட்ட வெற்றி, ''பழைய திரைப்படத்தின் டிஜிட்டல் மறு பதிப்புக்கு சில லட்சங்கள் தான் செலவாகும். மறு பதிப்பு செய்பவர்கள் மேம்படுத்தும் அம்சங்கள் குறித்து செலவு மாறுபடலாம். ஆனால், சராசரியாக 20- 30 லட்சம் ரூபாய் செலவாகலாம்'' என்று தெரிவித்தார்.

''அண்மையில், பெரு நகரங்களில் பல திரையரங்குகளுடன் கூடிய பன்முக திரையரங்குகள் அதிகரித்துள்ள நிலையில், இத்திரையரங்குகள் தற்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பழைய திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கலாம். டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்யப்படும் பழைய திரைப்படங்களை வெளியிட திரையரங்குகள் முன்வர வேண்டும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை DIVYA FILMS

டிஜிட்டல் மறு பதிப்பின் சவால்கள்

டிஜிட்டல் மறு பதிப்புகளில் உள்ள சவால்கள் குறித்தும், இதற்கு ஆகும் கால அளவு குறித்தும், திரைப்பட தயாரிப்பளரும், பாஃப்டா திரைப்பட அகாடமியின் நிறுவனருமான தனஞ்ஜெயன் பிபிசி தமிழோசையிடம் உரையாடினார்.

''பழைய திரைப்படங்களின் நெகட்டிவ் பிரிண்ட்கள் (பதிப்பு) கைவசம் இருந்தால் விரிவாக டிஜிட்டல் மறு பதிப்பு செய்து விடலாம். ஆனால், திரைப்படத்தின் பாசிட்டிவ் பிரிண்ட்கள் மட்டும் தான் இருந்தால், அது ஆறு மாதங்கள் கூட ஆகும்'' என்று தனஞ்ஜெயன் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை RAJ TV/ SAI GANESH FILMS

டிஜிட்டல் மறு பதிப்பு ஏன் வேண்டும் ?

''தற்போது ஏறக்குறைய அனைத்து திரையரங்குகளும் டிஜிட்டல் முறையில் தான் திரைப்படங்களை திரையிடுகின்றன. திரையரங்குகள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டன. அதனால் டிஜிட்டல் முறையில் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அனைத்து பழைய திரைப்படங்களும், டிஜிட்டல் முறையில் மறு பதிப்பு செய்தால் மட்டுமே அவற்றை வெளியிட முடியும்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆனால், பழைய திரைப்படங்களின் நெகட்டிவ் பிரிண்ட் அல்லது ஒரு பாசிட்டிவ் பிரிண்ட் கூட இல்லாத சூழலில், அவற்றை டிஜிட்டல் மறு பதிப்பு செய்ய முடியாது என்று தனஞ்ஜெயன் தெரிவித்தார்.

'ரஜினி, கமல் திரைப்படங்கள் டிஜிட்டல் மறு பதிப்பு செய்யப்பட வேண்டும்'

''எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய நடிகர்களின் பல திரைப்படங்கள் டிஜிட்டல் மறு பதிப்பு செய்யப்பட்டுன்ன. இக்காலகட்டத்தில், 'அண்ணாமலை', 'படையப்பா' போன்ற ரஜினிகாந்தின் திரைப்படங்களையும், 'நாயகன்' , 'மைக்கேல் மதன காமராஜன்' போன்ற கமலஹாசனின் திரைப்படங்களையும் மறு பதிப்பு செய்தால் மட்டுமே தான் தற்கால இளைஞர்கள் திரையரங்குகளில் இவற்றை ரசிக்க முடியும். இல்லையெனில், தொலைக்காட்சியிலும், டிவிடியில் தான் பார்க்க முடியும்'' என்று தனஞ்ஜெயன் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை DIVYA FILMS
Image caption நல்ல திரைப்படங்கள் என்றும் ரசிகர்களால் திரையரங்குகளில் ரசிக்கப்படுகின்றன

தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை தொலைக்காட்சியிலும், கணினியிலும் பார்ப்பதை விட திரையரங்குகளில் பார்ப்பதையே திரைப்பட ரசிகர்களும், இளைஞர்களும் பெரிதும் விரும்புகிறார்கள். பழைய திரைப்படங்கள் அதிகளவில் டிஜிட்டல் மறு பதிப்பு செய்யப்படுவது இவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அமையும் என்று திரைப்பட ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்