ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் கோரி மோதியை சந்திக்கச் செல்கிறார் தமிழக முதல்வர்

ஜல்லிக்கட்டு நடப்பதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாளை காலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்துப் பேசப் போவதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டுமென அவர் கோரியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடைவிதித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று காலையில் குவிந்த போராட்டக்காரர்கள் தற்போதுவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னையின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் ஒன்றான டைடல் பார்க், ராமானுஜம் தொழில்நுட்பப் பூங்கா, பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் திடீரென மதியத்திற்கு மேல் சாலைகளில் இறங்கி போராட்டத் துவங்கினர்.

இந்த நிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் அதற்கு சாதகமான தீர்ப்பு வர வேண்டும் என்றும் அதற்கு முன்பாக ஜல்லிக்கட்டை நடத்த வேண்டுமென்றால் மத்திய அரசுதான் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பதற்காக பொதுமக்களும் மாணவர்களும் மேற்கொண்டுள்ள போராட்டங்கள், நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்துப் பேசுவதற்காக நாளை அதாவது ஜனவரி 19ஆம் தேதியன்று இந்தியப் பிரதமரை நேரில் சந்திக்கவிருப்பதாகவும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

இதனால், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டுமென அவர் கோரியிருக்கிறார்.

இதற்கிடையில் முதலமைச்சரின் அறிக்கை குறித்து மயிலாப்பூரின் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மெரீனா கடற்கரையில் கூடியிருக்கும் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு குடியரசுத் தலைவரையும் பிரதமரையும் சந்தித்து வலியுறுத்தப் போவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், வரும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவிருப்பதாகவும் சசிகலா கூறியிருக்கிறார்.

மேலும் பீட்டா அமைப்பின் செயல்களைத் தடுக்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சசிகலாவின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்