தமிழக முதல்வரின் முடிவுக்காக காத்திருக்கும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இந்திய பிரதமர் மோதியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ள நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்படுவதற்கான சாத்தியமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, மதுரை, கோவை, வேலூர் உள்பட பல மாவட்டங்களில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இச்சூழலில், இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்றும், மோதியை சந்திக்கும் தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படுவதற்கான சாத்தியமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள். இச்சூழலில், தமிழகத்தில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மெரினாவில் குவியும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

மூன்றாவது நாளாக தலைநகர் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் பலர் கூடி வருகின்றனர். அலங்காநல்லூரில் நான்காவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒன்றிணைந்த தமிழ் திரையுலகம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகத்தை பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். சென்னையில் நடிகர் சிலம்பரசன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்று இரவு தன்னுடைய போராட்டத்தை தொடங்கினார்.

தொடர்புடைய தலைப்புகள்