ஜல்லிக்கட்டு: பிரதமர் மோதியை சந்தித்தார் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோதியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து மனு அளித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை tndipr

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரியும், பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க கோரியும் கடந்த சில தினங்களாக மாநிலத்திலுள்ள பல மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

நான்கு தினங்களுக்கு முன்பு அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டமானது தற்போது தமிழகம் முழுக்க பரவிய நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துள்ளார்.

நேற்றைய தினம் சென்னையிலிருந்து தில்லி புறப்பட்ட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லியில் உள்ள தமிழக அரசின் இல்லத்தில் தங்கினார்.

இன்று காலை 10.30 மணிக்கு தமிழக அரசின் இல்லத்திலிருந்து இன்று புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

அதற்குமுன், தமிழக அரசினர் இல்லத்திற்கு வெளியே ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பலர் கைகளில் பதாகைகளுடன் குவிந்து ஜல்லிக்கட்டு ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகத்தில் வலுத்து வரும் போராட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கிக் கூறியதாக அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்