தமிழர்களின் கலாச்சாரம் பெருமைக்குரியது: பிரதமர் மோதி

தமிழர்களின் உயரிய கலாச்சாரம் மிகவும் பெருமைக்குரியது என்றும், மத்திய அரசு தமிழர்களின் கலாச்சார விருப்பங்களை காப்பதில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

Image caption நரேந்திர மோதியின் ட்விட்டர் செய்தி

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோதி குறிப்பிடுகையில், 'தமிழகத்தின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து நாம் பெருமையடைகிறோம். தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தனது ட்விட்டர் செய்தியில், 'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. மேலும் பல முன்னேற்றங்களை தமிழ்நாடு அடைய மத்திய அரசின் ஆதரவு நிச்சயம் உண்டு' என்று தெரிவித்துள்ளார்.

Image caption நரேந்திர மோதியின் ட்விட்டர் செய்தி

முன்னதாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை என்ற கோரிக்கையை வலியுறுத்த கடந்த 19-ஆம் தேதியன்று, தில்லி வந்து பிரதமர் மோதியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வருவதை மத்திய அரசு ஏற்பதற்கு நடைமுறை சட்டச்சிக்கல்கள் இருப்பாக மோடி கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை PMOTWITTER

இந்த விஷயத்தில் தமிழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்றும் தன்னிடம் மோதி கூறியதாக பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் நல்லது நடக்கும் என்று பிரதமர் கூறினார். அதை அனைவரும் நம்புவோம். பொறுமை காக்கவேண்டும் என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்