யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே! - நடிகர் விவேக் கோரிக்கை

ஹிப் ஹாப் ஆதியின் பேச்சு யோசிக்க வைக்கிறது என்றும், உலகமே நம் மாணவர் அறப் போராட்டத்தை உச்சி முகர்கிறது, அதற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் நகைச்சுவை நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை அவசரச்சட்டம் மூலம் நீக்கப்பட்டுள்ள நிலையில், நிரந்தர தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாநிலம் முழுக்க பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், இன்றைய தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வாடிவாசலை திறந்து வைப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், பொதுமக்களின் போராட்டம் காரணமாக அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நாளை (ஜனவரி 23-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு நடத்த பிறப்பித்த அவரசச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து தமிழக சட்டமன்றத்தில் முன்வடிவு வரைவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் நாளை ஜல்லிக்கட்டு சட்ட முன்வரைவு நிறைவேறும்: முதல்வர்

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்களில் சிலர் சமூகத்திற்கு விரோதமாக எதிராக நடந்து கொண்டார்கள் என்றும், இதனால் தான் மனதளவில் புண்பட்டு இருப்பதாகவும் ஹிப்ஹாப் தமிழன் என்று அறியப்படும் ஆதி ஒரு காணொளியில் கூறினார்.

மேலும், இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து தான் விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகுகிறேன் : ஹிப் ஹாப் ஆதி வருத்தம்

ஆதியின் கருத்து குறித்து திரைப்பட நகைச்சுவை நடிகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகமே நம் மாணவர் அறப் போராட்டத்தை உச்சி முகர்கிறது என்றும், அதற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவுறித்தி உள்ளார்.

மாணவர்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று என்று கூறியுள்ள அவர், தனிநபரை கொச்சைபடுத்தும் கோஷங்கள், தேசியக்கொடி அவமதிப்பு போன்றவை நிகழல் கூடாது என்றும் நிதானம் அவசியம் என்றும் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.

என்னைப்போல நீங்கள் அனைவரும் கலாம் அய்யாவின் சீடர்கள் என்று பதிவிட்ட விவேக், இப்போது அவர் இருந்தால் என்ன முடிவெடுப்பார் யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்