ஜல்லிக்கட்டு: கோவை, திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கோவை மற்றும் திருப்பூரில் ஏரளாமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினாவில் தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

Image caption திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவ மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திருப்பூரிலும் மாணவ , மாணவிகள் இன்று (திங்கள்கிழமை) போரட்டத்தில் ஈடுபட்டனர் . காலை 11 மணியளவில் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையிடம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை தங்களுக்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து மாணவர்களுக்கு கொண்டு வந்த உணவினை போலீசார் முதற்கட்டமாக நிறுத்தினர் . பின்னர், 500-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்ய ஆரம்பித்தனர். கூட்டத்தில் இருந்த மாணவியர் மனித சங்கிலியாய் இணைந்து மாணவர்களை கைது செய்யாதவாறு அரண் அமைத்தனர் . ஆனால், காவல்துறை மாணவியர் உட்பட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

காவல்துறை கடுமையாக நடந்துகொண்டதாக மாணவியர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல், கோவை நகரில் வ உ சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். போலீசார் வந்தபோது மாணவர்கள் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினார்கள். இருந்த போதிலும் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க கோரி திருமண மண்டப வாயில் கதவை உடைத்த சுமார் 100 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

Image caption கோவையில் நடந்த போராட்டம்

மேலும், கோவை நகரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை நகரில் பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்