சென்னை வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன : கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பாக நேற்று சென்னை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் தனக்கு வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன்தெரிவித்துள்ளார்.

Image caption 'சென்னை வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன'

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ''சென்னையில் போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போராட்டம் நடத்திய விதம் மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்தார்.

போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருவதாக சிலர் கூறுவது பற்றி குறிப்பிட்ட கமல்ஹாசன், மக்களின் நீண்ட நாள் குமுறல்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Image caption சென்னையில் நடந்த வன்முறை

அமைதி வழியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தது விரும்பத்தகாத நிகழ்வு எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

''நான் விருமாண்டி திரைப்படத்தை பண்ணியதால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆதரிக்கவில்லை. ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை அறிந்ததால், நன்கு புரிந்ததால் தான் இதனை ஆதரிக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

''மரண தண்டனைக்கு எதிரான மனநிலை மற்றும் கருத்து கொண்டவன் நான். ஜல்லிக்கட்டு மற்றும் மரண தணடனை ஆகியவை குறித்து திரைப்படங்களில் நான் நடித்துள்ளேன்'' என்று கமல்ஹாசன் கூறினார்.

நாளை மறு நாள் மேலும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கக் கூடும். அப்போது இது குறித்து நாம் மேலும் விவாதிக்கக் கூடும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் நேற்று திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்தன.

சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல்கள் நடந்தன.

மேலும், தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை போலீசார் அப்பறப்படுத்தினர். ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்