ஜல்லிக்கட்டு 2016ம் ஆண்டு அனுமதி உத்தரவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பல எதிர்ப்புக்களைத் தாண்டி

ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி வெளியிட்ட அரசு அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வின் முன்பு இன்று செவ்வாய்க்கிழமை இந்திய கிரிக்கெட் வாரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த வழக்கிற்காக ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையை திரும்பப் பெறப் போவதாகத் தெரிவித்தார். அப்போது, அதுகுறித்து, உரிய அமர்வில், (நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான வேறு அமர்வு) தெரிவிக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

அரசின் இந்த முடிவினால், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தீர்ப்பில், மத்திய அரசின் அறிவிக்கையை செல்லாது என்று தீர்ப்பளிப்பது தடுக்கப்படும். ஒருவேளை அவ்வாறு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், தமிழக அரசு புதிதாக சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கும் நிலையில், மேலும் குழப்பங்களை ஏற்படுத்த வழிவகுக்கும்.

எனினும், மத்திய அரசு முறைப்படி தனது முடிவைத் தெரிவித்த பிறகு, உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக இறுதி முடிவை எடுக்கும்.

வழக்கின் பின்னணி?

கடந்த 2006-ஆம் ஆண்டு, நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்ற தனது மகன் இறந்துவிட்ட காரணத்தால், அதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார். அதை ஏற்று, நீதிபதி பானுமதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து, டிவிஷன் பெஞ்ச் முன்பு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

அதற்கு எதிராக, 2007-ஆம் ஆண்டு, மத்திய அரசின் ஓர் அங்கமான விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இதனிடையே, நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஜல்லிக்கட்டு நடத்த 2009-ஆம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றியது. அந்தச் சட்டத்தை விலங்குகள் நல வாரியம் எதிர்த்தது.

இதனிடையே, 2011-ஆம் ஆண்டு சர்க்கஸை தடை செய்ய வேண்டும் என்ற சர்ச்சை நீடித்து வந்த நிலையில், சர்க்கஸில் பயன்படுத்தப்படும் சிங்கம், புலி, கரடி, குரங்கு ஆகிய விலங்குகள் பட்டியலில் காளைகளையும் சேர்த்து, அதையும் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார் அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ். அதனால், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையும் சேர்ந்தது.

இந்த நேரத்தில், அமெரிக்காவை மையமாகக் கொண்ட பீட்டா அமைப்பு, மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுச் செய்தது.

இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, 2014-ஆம் ஆண்டு மே மாதம், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.

எனவே, 2016-ல் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் வகையில், ஜனவரி 7-ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் வகையில் ஓர் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அதை எதிர்த்து, விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்பட 12 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடின.

இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்