ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு: திங்கட்கிழமை விசாரணை

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும் விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புக்கள் மனுத்தாக்கல் செய்வதற்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (கோப்புப்படம்)

இந்த மனுக்கள் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று புதன்கிழமை காலை, விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் சார்பிலும், மேலும் பல விலங்குகள் நல அமைப்புக்கள் சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர் ஆகியோர் ஆஜரானார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள, 1960-ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது, மத்திய அரசு ஏற்கெனவே தனது 2016-ஆம் ஆண்டு அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்திருக்கும் நிலையில், அதுகுறித்து வரும் திங்கட்கிழமை பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், நீதிபதி ரோஹிங்டன் நாரிமனுடனான தனது அமர்வில் அது விசாரிக்கப்படலாம் என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறும் முடிவு, 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்றும், எனவே அந்த முடிவை எதிர்த்தும் தாங்கள் மனுத்தாக்கல் செய்ய விரும்பவுதாக அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த அமைப்புக்கள் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து, சில அமைப்புக்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசுதான் கொண்டுவர முடியும் என்றும், மத்திய அரசின் சட்டங்களில் மாநில அரசுகள் சட்டத் திருத்தம் மூலம் புதிய விதிகளைப் புகுத்த முடியாது என்றும் அந்த அமைப்புக்கள் தங்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளன.

தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கக் கூடாது என்றும் அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

அதே நேரத்தில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பில், தமிழக அரசு உள்பட ஏற்கெனவே 70 கேவியட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டால், தங்கள் தரப்புக் கருத்துக்களையும் கேட்காமல் நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது என்பதே கேவியட் மனுவின் நோக்கம்.

தொடர்புடைய தலைப்புகள்