ஜல்லிக்கட்டு போராட்டம் : அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழக காவல் துறை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் நேற்று முன்தினம் (ஜனவரி 23)முடிவடைந்தபோது, சென்னையிலும், மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் காவல்துறை நடந்துகொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

சென்னை வன்முறை; தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை

ஜனவரி 23-ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை நகரக் காவல்துறை பத்திரிகைகளுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில், ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டம் வெற்றியடைந்ததால், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அமைதியாகக் கலைந்து சென்றுவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு ஆறு மணியளவில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை, போராட்டக்காரர்கள் உடனடியாகக் கலைந்துசெல்ல வேண்டுமெனக் கூறியது. ஆனால், போரட்டக்காரர்கள் அவகாசம் கோரினர். அதைக் காவல்துறை ஏற்கவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிபிசி தமிழ் செய்தியாளரின் கேமரா லென்ஸை உடைத்த அதிகாரி

இதையடுத்து, அவர்களில் சிலரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த ஆரம்பித்தது காவல்துறை.

போர்க்களமான சென்னை கடற்கரை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அமைதியாக முடித்த போலீஸ் அதிகாரியின் உரை (காணொளி)

மீதமிருந்தவர்கள், கடலை ஒட்டியுள்ள மணற்பரப்பை நோக்கி ஓடத்துவங்கினர். இதையடுத்து அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவே, போராட்டக்கரார்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தது காவல்துறை.

ஆனால், அதே நேரத்தில் சென்னையின் பிற பகுதிகளில் இருந்த கடற்கரையை நோக்கி வரும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. புதிதாக யாரும் வந்து போராட்டக்காரர்களுடன் இணைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து, கடற்கரையைச் சுற்றியுள்ள சாலைகளில் குவிந்தவர்கள் தடை ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதிகளைத் தாண்டி தங்களை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கண்ணீர் புகைக் குண்டு வீச்சு

சிலர் தடைகளைத் தாண்டி காமராஜர் சாலையை அடைந்தபோது, அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. காமராஜர் சாலையில் மூன்று முறை கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.

இதற்குப் பிறகு கடற்கரையை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் கலவரம் வெடித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

நடேசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, நடுக்குப்பம், ரூதர்போர்டு புரம் ஆகிய பகுதிகளில் கல்லெறிச் சம்பவங்கள் நடந்தன. இதற்குப் பிறகு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. கல்லெறியில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியாத நிலையில், வீடுவீடாகப் புகுந்து, உள்ளிருந்தவர்களைத் தாக்கியது.

நடுக்குப்பம் பகுதியில் இருந்த மிகப்பெரிய மீன் சந்தை ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தின் முன்பாக இருந்த இருசக்கர வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

வாகனங்களுக்கு தீ வைத்தது காவல்துறையா?

இது தவிர, இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் தேவையின்றித் தாக்கும் காட்சிகளும் காவல்துறையினரே வாகனங்களுக்கும் வீடு ஒன்றுக்கும் தீவைக்கும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் ஜார்ஜ், தான் அந்தக் காட்சிகளப் பார்க்கவில்லையென்று தெரிவித்தார்.

அதற்குப் பிறகு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இது தொடர்பான காட்சிகள் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல்

இதே நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டக்காரர்களை கலைந்துசெல்ல வைக்கும் முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Image caption அலங்காநல்லூரில் நடந்த போராட்டம்

23ஆம் தேதியன்று, காலையிலிருந்தே கூட்டத்தைக் கலைப்பதற்காக காவல்துறை பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கூட்டம் கலையாத நிலையில் தடியடியில் ஈடுபட்டது.

இதற்கிடையில், கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.

Image caption அலங்காநல்லூர் போராட்டத்தில் நடந்த வன்முறை

"இதில் காவல்துறை என்னைத் தனிமைப்படுத்தி தாக்குதல் நடத்தியது. ஓபிஎஸ்ஸையே எதிர்ப்பாயா என்று கூறி தலையிலும் கைகளிலும் கடுமையாகத் தாக்கினர். 23ஆம் தேதி என்னைப் பிடித்தவர்கள் 24ஆம் தேதி மாலை வரை என்னைக் கைதுசெய்ததாகக் காண்பிக்கவில்லை. இதற்கிடையில் மருத்துவமனையில் சேர்த்து, அங்கிருந்தும் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தார்கள்" என்று குற்றம்சாட்டுகிறார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மனித உரிமை ஆர்வலர் முகிலன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கோவை காந்திநகர் பேருந்து நிலையத்தில் வன்செயல் சம்பவம்

இவருக்கு தலை, கால், கை ஆகிய இடங்களில் கடுமையாக காயம் ஏற்பட்டிருக்கிறது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு

இதேபோல, வைகை நதிப் பாலத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ரயிலை மீட்கும் முயற்சியின் போது கீழேயிருந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஜனவரி 24ஆம் தேதியன்று வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தேடுவதாகக் கூறி, மீண்டும் காவல்துறையினர் மாட்டாங்குப்பம் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"இப்போதும் மாட்டாங்குப்பம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் உலவிவருகிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கவே பயமாக இருக்கிறது" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவரான முகில்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவரான முகேஷ் பிபிசியிடம் இந்த வன்முறை குறித்துப் பேசியபோது, "நாங்கள் நான்கு மணி நேர அவகாசம் மட்டுமே கேட்டிருந்தோம். அந்த அவகாசத்தைக் கொடுத்திருந்தால் கலைந்து போயிருப்போம். அதைச் செய்யாமல் காவல்துறை வன்முறையில் இறங்கியது" என்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 23ஆம் தேதிவரை காவல்துறையும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைத்ததாக கூறப்பட்டுவந்த நிலையில், 23ஆம் தேதி வெடித்த வன்முறை காவல்துறைக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கேமரா லென்ஸ் பறிப்பு: என்ன நடந்தது? பிபிசி செய்தியாளர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் போராட்டக்களத்தில் ஊடுருவிய தேசவிரோத சக்திகள்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என்று கூறுகிறது காவல்துறை. ஆனால், அந்த சக்திகளை முன்கூட்டியே ஏன் கைதுசெய்யவில்லை எனக் கேள்வியெழுப்புகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

மனித உரிமை ஆணையம் தற்போது இந்த வன்முறை குறித்த ஆய்வில் இறங்கியுள்ளது. மக்கள் நலக் கூட்டணி ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் இதனை விசாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு வன்முறை: கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்