பாலியல் புகார்: மேகாலய ஆளுநர் சண்முகநாதன் ராஜிநாமா

மேகாலய மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் மீது எழுந்துள்ள பாலியல் புகார் காரணமாக அவர் ராஜிநாமா செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை MEGALAYA RAJBHAVAN
Image caption பிரதமர் மோதியுடன் சண்முகநாதன் (கோப்புப்படம்)

ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 80க்கும் மேற்பட்டவர்கள், சண்முகநாதன்ஆளுநர் மாளிகையின் மாண்பை குலைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரியும் அவர்கள் பிரதமர் நரேந்திர மோதிக்கும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூத்த பாஜக தலைவரும், ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினருமாக இருந்த சண்முகநாதன் மீது எழுந்துள்ள புகார்களை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

''ஆளுநர் சண்முகநாதன் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார் என்ற தகவலை அறிந்தேன். நான் தற்போது மேகாலயாவில் இல்லை. அதனால் மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது,'' என்று ஆளுநரின் செயலர் ஷாங்ப்பிலைங் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் செப்டம்பர் 2015 முதல் மேகாலய மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்தார். கடந்த நவம்பர் 2016ல் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பொறுப்பு ஆளுநராகவும் கூடுதல் பதவி வகித்து வந்தார்.