ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, ஆந்திரா பிரச்சனைகளில் பாராமுகமா? தெலுங்கு நடிகர்கள் மீது சர்ச்சை

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநில இளைஞர்கள் நேற்று ஆரம்பித்த போராட்டத்திற்கு பிரபல நடிகர் மகேஷ்பாபு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று ராம்கோபால் வர்மா டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை STRDEL
Image caption கோப்புப்படம்

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழ்த் திரையுலகத்தினர் அனைவரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

நடிகர் கமல்ஹாசன் போராட்டம் முடிந்த பின்னரும் டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் போராட்டம் முடிந்த தினத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, மாணவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோர் போராட்டம் நடைபெற்ற மெரினா கடற்கரைக்குச் சென்று நடிகர்கள் என்ற அடையாளம் இல்லாமல் மக்களோடு மக்களாக போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பினர். மற்ற சில நடிகர்கள் போராட்டக் களத்திலேயே சில நாட்கள் தொடர்ந்து இருந்தனர். பலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

மாநிலம் கடந்தும் இந்தப் போராட்டத்திற்கு மற்ற மொழி நடிகர்கள் சமூக வலைத்தளங்களிலும், வீடியோக்கள் மூலமும் தங்களின் ஆதரவு நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தினர்.

மலையாள நடிகர்களான மம்முட்டி, ஜெயராம் இருவரும் வீடியோ மூலமும், நிவின் பாலி, வினித் சீனிவாசன் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர்.

தெலுங்குத் திரையுலகத்திலிருந்து பிரபல நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தன்னுடைய விளக்கமான ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

மற்ற எந்த நடிகர்களும் தராத ஒரு விளக்கமான அறிக்கையுடன் எதற்காக அவர் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார் என்பதை புள்ளி விவரங்களுடன் தன்னுடைய டிவிட்டரில் பதிவு செய்தார். பவன் கல்யாணைத் தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகரான மகேஷ் பாபுவும் டிவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption ஜல்லிக்கட்டு குறித்து டிவிட்டரில் மகேஷ் பாபு

அப்போது தமிழ் மக்களுக்கு மகேஷ் பாபு தெரிவித்த ஆதரவு தற்போது அவருக்கு ஆந்திர மாநிலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்களும், இளைஞர்களும் நடத்தியதை முன் மாதிரியாகக் கொண்டு, தங்களது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திர இளைஞர்கள், நேற்று விசாகப்பட்டினத்தில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

இந்த போராட்டத்திற்கு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சில நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

அவருடன் வேறு சில நடிகர்களும் ஆதரவளிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவளித்த நடிகர் மகேஷ் பாபு, ஆந்திர மாநில இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

இதனால், பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம்கோபால் வர்மா, மகேஷ்பாபு தமிழ்நாட்டு போராட்டத்திற்கு மட்டும் ஆதரவளித்துவிட்டு, அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய ஆந்திர மாநில மக்களுக்கு ஏன் இதுவரை தன் ஆதரவைத் தெரிவிக்கவில்லை என இரு தினங்களுக்கு முன்பு டிவிட்டர் மூலம் கேள்வி எழுப்பினார்.

அப்போது பவன் கல்யாண் போராட்டத்திற்கு ஆதரவளித்ததையும் பாராட்டி எழுதியிருந்தார்.

மகேஷ்பாபு படங்கள் தமிழ்நாட்டில் 'டப்பிங்' செய்யப்படுவதால் அவற்றின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதற்காகத்தான் ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு கொடுத்தார் என்றும் ராம்கோபால் வர்மா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், ராம்கோபால் வர்மாவின் கேள்விகளுக்கு இதுவரை மகேஷ் பாபு எந்த பதிலும் தரவில்லை.

பவன் கல்யாண் மீதும் விமர்சனம்

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption மகேஷ்பாபு படங்கள் தமிழ்நாட்டில் 'டப்பிங்' செய்யப்படுவதால் அவற்றின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதற்காகத்தான் ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு கொடுத்தார் : ராம் கோபால் வர்மா

இந்த நிலையில் இன்று காலை ராம்கோபால் வர்மா திடீரென பவன் கல்யாணை விமர்சனம் செய்தும் கருத்துக்களைப் பதிவிட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் பவன் கல்யாணை இந்த விவகாரத்திற்காகப் பாராட்டியிருந்தார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஆந்திர மாநில மக்களின் போராட்டம் பெரும் எழுச்சியைப் பெறவில்லை என்று கருத்துகள் பரவி வருகின்றன. "தமிழ் மக்களைப் போல ஒற்றுமையுடனும், உறுதியாகவும் தெலுங்கு மக்கள் இருப்பார்கள், இந்தப் போராட்டம் பெரும் தோல்வியடைவதிலிருந்து பவன் கல்யாண் தடுப்பார் என நம்புகிறேன்," என டிவிட்டரில் பதிவிட்டார்.

தொடர்ந்து, "பவன் கல்யாண் தொலைவில் இருந்து கொண்டு டிவிட்டரில் மட்டுமே ஏன் பதிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். போராட்டக் களத்திற்கு எப்போது வருவார் ?. ஒரு அரசன் முன்னின்று நடத்தாத ஒரு போர் எப்படி வெற்றி பெறும் ?" என பவன் கல்யாணை நோக்கியும் கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவர் சொன்ன கருத்துக்கள் இப்போது சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன.

ராம்கோபால் வர்மாவின் கருத்துக்களுக்கு பவன் கல்யாண் ரசிகர்கள் தற்போது தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு மகேஷ்பாபுவைப் பற்றி அவர் சொன்ன கருத்துக்களுக்கு மகேஷ் பாபுவின் ரசிகர்களும் தங்களது பதில்களைத் தெரிவித்தார்கள்.

படத்தின் காப்புரிமை TWITTER

தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த விஷயமாக இருந்தது. ஆனால், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் அரசியலும் கலந்திருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காக ராம்கோபால் வர்மா எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை சர்ச்சையாக்குகிறார் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களைப் பதிவு செய்கிறார்கள்.