ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒருவாரத்துக்கு தள்ளிவைப்பதாக விழாக்கமிட்டி அறிவிப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை சில தினங்களுக்கு தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியின் தலைவர் சுந்தரராஜன், பிபிசியிடம் இதைத் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்து, அதன் பிறகு, சட்டத் திருத்த மசோதாவும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந் நிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி அலங்காநல்லூரிலும், 2-ஆம் தேதி, பாலமேட்டிலும், 5-ஆம் தேதி அவணியாபுரத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த விழாக் கமிட்டியினர் முடிவு செய்தனர்.

இந் நிலையில், திடீரென அந்த நிகழ்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டித் தலைவர் சுந்தரராஜனிடம் கேட்டபோது, விழாவில் கலந்துகொள்ள அதிக அளவிலான மாடுகள் வருவதாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து அதிகபட்சமாக ஒரு வாரத்துக்குள் விழாவை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருடன் விவாதித்ததாகவும், தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு, விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என அவர் யோசனை கூறியிருப்பதாகவும் சுந்தரராஜன் தெரிவித்தார்.

இதற்கிடையில், வரும் திங்கட்கிழமை முதல்வரைச் சந்திக்க நேரம் கோரியிருப்பதாகவும், அப்போது, முதலமைச்சரும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, அலங்காநல்லூரில் தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க இருப்பதாகக் கூறி, மதுரை சென்றார். ஆனால், நிரந்தரச் சட்டம் வரும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என அலங்காநல்லூர் மக்களும் போராட்டக்காரர்களும் அறிவித்ததால் அவர் அலங்காநல்லூர் பயணத்தை ரத்து செய்து சென்னை திரும்பினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்