ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேசவிரோதிகளை தண்டிக்க வேண்டும்: நிர்மலா

ஜல்லிக்கட்டு போராட்டத்தில், இந்திய தேசிய கொடியை எரித்தவர்களும், பிரதமர் மோதியை விமர்சித்து கோஷமிட்டவர்களும் தேசவிரோதிகள் என்றும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்றும் சென்னையில் சனிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னையில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களில் ஊடுருவிய ''தேச விரோத சக்திகள்தான்'' போராட்டத்தை திசை திருப்ப முயன்றனர் என்றார் நிர்மலா.

''அறிவழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் நடக்க தேச விரோதிகள்தான் காரணம். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்தது. மோதி தற்போது பிரதமராக உள்ளார். இதற்கு முன்பு பலர் அந்த பதவியில் இருந்தனர். அந்த பதவிக்கு மரியாதை அளிக்காமல் கோஷமிட்டது தேச விரோத செயல்தான். அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்,'' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் காவல் துறையின் பிடியில் இளைஞர் ஒருவர் (கோப்புப்படம்)

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் காவல்துறைதான் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த அவர், ''காவல் துறையினர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளதாக கேள்விப்பட்டேன். அதை நான் வரவேற்கிறேன்." என்றார்.

மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் தமிழக மக்களுக்கு எதிராக நடந்து கொண்டது என்றார் அவர். காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர்கள் தனி நபர்கள் என்ற போர்வையில் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வாதாடினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

''காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டு காளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் எண்ணங்களை அறியாமல் தவறாக முடிவை எடுத்தது,'' என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட காரணத்தால்தான் தமிழக அரசே அவசரச் சட்டம் கொண்டு வரலாம் என்றும் அதற்கான வாய்ப்பு இருப்பது பற்றி மத்திய அரசு விளக்கிச் சொன்னது, '' என்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவரச சட்டம் கொண்டுவந்துள்ளது குறித்து நிர்மலா தெரிவித்தார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தவறு இழைக்கவில்லை என்றார். ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சட்டமாக இயற்றிக் கொண்டு வருவதுதான் நிரந்தரமானதாக இருக்கும் என்பதால் அந்த முடிவை எடுத்தது. பாரதீய ஜனதா, சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து எதையும் செய்கிறது,'' என்றார்.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாமல் ஆக்கப்பட்ட விவகாரம் பற்றி பேசிய போது, ''அந்த முடிவால் தொழில், வர்த்தகத்தில் தாக்கம் இருப்பது உண்மைதான். அது குறிப்பிட்ட காலத்துக்குள் சீராகும்,''என்றார்.