ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் தமிழக அரசின் வரலாற்றில் ஒரு நீங்காத கறை: தொல்.திருமாவளவன்

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 23 ஆம் தேதி நிகழ்ந்த வன்செயல்களை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆறு நாள் போராட்டம் அமைதியாக நடைபெற்றதாகவும், 7-வது நாளில் போலீஸார் திட்டமிட்டே வன்முறையை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

சமூக விரோதிகள் என கூறுவது தவறு

போலீஸாரின் இந்த அத்துமீறல் தமிழக அரசின் வரலாற்றில் ஒரு நீங்காத கறையாக அமைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டிய திருமாவளவன், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என கூறுவது தவறு என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கட்டுப்பாடின்றி தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், சட்டப்பேரவையில் காவல்துறை எழுதிக் கொடுத்ததை முதல்வர் படித்துள்ளார் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் நீதி விசாரணை வேண்டும்

சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் குறித்து மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை வரவேற்பதாகவும், ஆனால் தமிழக அரசு நீதி விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

காவல்துறை கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை

கோவை மற்றும் சென்னை மாநகர ஆணையர் மீதும், மதுரை புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இனிவரும் காலங்களில் மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என்ற காவல்துறையின் உத்தரவு குறித்து கருத்த தெரிவிக்கையில், தடையை மீறி மக்கள் நலக்கூட்டணி கண்டன கூட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்