நடிகர் சூர்யாவிடம் மன்னிப்பு கோரியது பீட்டா

நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளி்ப்பது தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு பீட்டா அமைப்பு சூர்யாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption மீண்டும் தூண்டும் பீட்டா

மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா தெரிவித்த கருத்துக்களை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பீட்டா அமைப்பு கோரியுள்ளது.

அடுத்து வெளியாகவுள்ள தனது 'சி 3' என்ற படத்துக்கு விளம்பரம் தேடும் நோக்கத்தில்தான், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா குரல் கொடுப்பதாக பீட்டா அமைப்பின் நிர்வாகிகள் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.

இது தொடர்பாக, நடிகர் சூர்யா, தனது வழக்கறிஞர் மூலமாக அனுப்பியிருந்த நோட்டீஸுக்கு பதில் விளக்கம் அளித்திருந்த பீட்டா அமைப்பின் கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பீட்டா அமைப்பின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியான பூர்வா ஜோஷிபுரா எழுதியிருந்த அந்த கடிதத்தில், வழக்கறிஞர் நோட்டீஸில் நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்து உண்மையாக இருக்கும் பட்சத்தில், தாங்கள் முழுமனதோடு மன்னிப்புக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் நலனுக்காக 'அகரம்' என்கிற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, பல்வேறு நலப்பணிகளில் நீங்கள் ஈடுபட்டு வருவது எங்களுக்கு தெரியும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஜோஷிபுரா, ஆனால் நடிகர் சூர்யா,விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் கொடுமையை விளைவிக்கும் , ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்கு ஆதரவாக வாதாடுவதை நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.

அத்தோடு இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பு ஒன்றையும் நடிகர் சூர்யாவுக்கு அனுப்பியுள்ள பீட்டா அமைப்பு, நடிகர் சூர்யாவின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்துக்களை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்