சென்னை மெரீனாவில் 144 தடையுத்தரவு

சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் நேற்றிரவு (சனிக்கிழமை) முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு வார காலத்துக்கும் மேலாக ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நடைபெற்ற சென்னை மெரீனா கடற்கரையில், இளைஞர்கள் மீண்டும் கூட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் காவல்துறையினர் நேற்று பிற்பகல் முதலே குவிக்கப்பட்டு வந்தனர்.

இது தொடர்பாக , சென்னை மாநகர் காவல்துறை செய்தி குறிப்பில், ''சென்னை மாநகரத்தில் அமைதியை பராமரிக்கும் நோக்கிலும், நகரின் சட்டம் , ஒழுங்கை சீர்குலைக்கும் வண்ணம் சமூக விரோத சக்திகள் மற்றும் தேச விரோத சக்திகளின் தீட்டும் கொடிய திட்டங்களை முறியடிக்கும் விதத்தில் சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது'' என்று காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜனவரி 23-ஆம் தேதி சென்னை கடற்கரையில் கடுமையான கலவரம் வெடித்தது

''ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் தமிழக அரசின் வரலாற்றில் ஒரு நீங்காத கறை''

இந்த தடை உத்தரவு பிப்ரவரி 12-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இது சென்னை மெரீனா, மைலாப்பூர், ஐஸ் ஹவுஸ், பட்டினப்பாக்கம், திருவில்லிக்கேணி மற்றும் அண்ணா சதுக்கம் ஆகிய காவல நிலைய எல்லைகளுக்கு பொருத்தும் என்று காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மெரீனா கடற்கரை பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை நேற்றிரவு முதல் பிப்ரவரி 12 வரை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)

முன்னதாக, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு ஆதரவான போராட்டங்களை ஒட்டி ஜனவரி 23-ஆம் தேதி சென்னை கடற்கரையில் கடுமையான கலவரம் வெடித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்கள், காவல்துறையே தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டிய நிலையில், காவல்துறை இதனை மறுத்தது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரி நடந்த போராட்டம் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி துவங்கியது.

Image caption சென்னை கடற்கரையை விட்டு அகல மறுத்த போராட்டக்காரர்கள்

தமிழக அரசு அதற்கென அவசரச் சட்டத்தைப் பிறப்பித்த பிறகும், போராட்டக்காரர்கள் போராட்டங்களை முடித்துக்கொள்ளாததால், 23-ஆம் தேதியன்று சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து அவர்களை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றபோது, சென்னை நகரம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக சுமார் 180 பேர் கைது செய்யப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்