கப்பல்கள் மோதலால் சென்னை கடற்பரப்பில் பரவிய எண்ணெய் படலங்களை அகற்றும் பணி தீவிரம்

எண்ணூர் துறைமுகம் அருகே சனிக்கிழமை இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள கடற்பரப்பில் பரவியுள்ள எண்ணெய் படலங்களை அகற்றும் பணி மூன்றாவது நாளாக இன்று திங்கள்கிழமையும் தொடர்கின்றது.

இந்தியாவில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள, கடலோர காவல்படையின் மாசு கட்டுப்பாட்டுக்குழு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சனிக்கிழமை அதிகாலையில், எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

Image caption சென்னை கடற்பரப்பில் பரவிய எண்ணெய் படலங்களை அகற்றும் பணி தீவிரம்

இந்த விபத்தானது மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கவில்லை என்றும், 200 லிட்டர் அளவிலான எண்ணெய் கசிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், எண்ணூர் காமராஜர் துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பகுதியில் கடல் மாசு ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாளை செவ்வாய்கிழமைக்குள் நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அந்த அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.

Image caption எண்ணெய் படலங்களை அகற்றும் பணி தீவிரம்

எண்ணெய் கசிவு ஏற்படும் காலக்கட்டங்களில் நிலைமையை சமாளிக்க தேவையான பயிற்சிகளுடன், இந்திய கடலோர காவல்படையின் மாசு கட்டுப்பாட்டுக்குழு தயார் நிலையில் இருந்ததாக கடலோர காவல்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் எண்ணெய் திட்டுக்கள், சென்னை மெரினா கடற்கரை பகுதியை தாண்டியும் பரவ தொடங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்தோடு மீன் வளத்துக்கு பாதிப்பை உண்டாகியுள்ள இந்த எண்ணெய் படலம், கடல் வாழ் உயிரினமான அரிய வகை ஆமை இனங்கள் உயிர் இழப்பதற்கும் காரணமாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

சென்னை பகுதியை சேர்ந்த மீனவர்களும் எண்ணெய் கசிவு குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பாதிப்படைந்துள்ள மீன்பிடி தொழில், தற்போதைய சூழலால் மேலும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க கூடும் என்றும், அதனால் அரசு தங்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்