அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச தேர்தல் - வெற்றிக்கனி யாருக்கு ?

'இந்தியாவின் தலைநகர் தில்லிக்கு செல்லும் அரசியல் பாதை உத்தரப்பிரதேசம் வழியாகத் தான் செல்ல முடியும்' என்பது நாட்டில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் உலவும் பிரபலமான வாக்கியமாகும்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மிகவும் சவாலாக விளங்கும் உத்தரப்பிரதேச தேர்தல் (கோப்புப் படம்)

விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு, ஐந்து இந்திய மாநிலங்கள் தயாராகி வரும் வேளையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேசம்

ஏறக்குறைய, 20 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம் , கிட்டத்தட்ட பிரேசில் நாட்டின் மக்கள் தொகைக்கு இணையானது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒரு முறை 400 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மேல் இம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும், இந்திய நாடாளுமன்றத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து இம்மாநில மக்களால் 80 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

2014-இல் உத்தரப்பிரதேசத்தில் பெரும் வெற்றியை பெற்ற பாஜக

படத்தின் காப்புரிமை PTI
Image caption 2014-இல் உத்தரப்பிரதேசத்தில் பெற்ற வெற்றி மீண்டும் பாஜகவுக்கு கிடைக்குமா?

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர்களில், நான்கில் ஒரு மடங்கு உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் உள்ள உத்தரப் பிரதேசத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாது, இது வரை இந்தியாவின் 14 பிரதமர்களில், 8 பிரதமர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரும் இதில் உள்ளடங்குவர்.

ஆனால், இம்மாநிலம் குறித்த தேர்தல் சவால்கள் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா செல்லாத நோட்டு பிரச்சனை?

வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக

தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகத்தில் மோதியின் தலைமையில், அவரது நம்பிக்கைக்கு உரியவரும், ஆளும் பாஜகவின் தேசிய தலைவருமான அமித் ஷா ஆகியோர் எண்ணிக்கையாக மட்டுமல்ல, தங்கள் ஆட்சிக்கு மக்கள் தரும் அங்கீகாரமாக இந்த மாநிலத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

அயோத்யாவில் நடந்த பாப்ரி மசூதி இடிப்புக்கு பிறகு, 'ராமர் கோவில்' உணர்வு பிரச்சாரத்தை முன்வைத்த சில வலது சாரி இந்து அமைப்புகளின் முயற்சியினால், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டில் முதல்முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தது.

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டே ஆண்டுகள் உள்ள நிலையில், பாஜக இந்த அதிமுக்கிய மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று விரும்பும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் முக்கியத்துவம்

மேலும், வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளதால் , இம்மாநிலத்தில் அதிக உறுப்பினர்கள் வெல்வது பாஜகவுக்கு முக்கியமானதாக அமைகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption உத்தரப்பிரதேசத்தை வெல்லும் சவாலில் தேசிய கட்சிகள்

2014 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத்தை வெல்வதன் மூலம் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவிற்கு அக்கட்சி உருவாக்கிய உயர் மட்ட மூலோபாய திட்டம் இயற்றுபவர் என்ற பெருமையை ஈட்டித் தரும்.

இந்த மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள பாஜகவுக்கு தேர்தல் வெற்றி, 15 ஆண்டுகளுக்கு பிறகு, உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சியின் எதிர்காலத்தை மாற்றியமைக்க உதவும்.

மேலும், செல்லா நோட்டு விவாகரத்துக்கு பிறகு உண்டான சிக்கல்களை தாண்டி கட்சியின் நிலையை எடுத்துச் செல்ல இந்த தேர்தல் வெற்றி உதவும்.

ஆனால், உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வெற்றி என்பது எளிதாக சாதிக்க முடிந்த ஒன்று அல்ல.

காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி ஏன்?

உள்கட்சி மோதல் இருந்த போதிலும், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சி, தடுமாறிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை PTI
Image caption அகிலேஷ் யாதவ் பிரிவுக்கும், முலாயம் சிங் யாதவ் பிரிவுக்கும் தொடர்ந்து நிலவிய கருத்துவேறுபாடு

கட்சியின் நிறுவனரும், தன் தந்தையுமான முலாயம் சிங்குடன் பொது வெளியில் நடந்த மோதல்கள், இளம் வயது முதல்வர் அகிலேஷ் யாதவின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கவில்லை. கிட்டத்தட்ட கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவரின் பின் அணிவகுத்து நின்றனர்.

கடந்த 2012-ஆம் ஆண்டில் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலை கிட்டத்தட்ட தனியாக வென்று காட்டிய பிறகு, ஊழல் மற்றும் குற்றங்கள் அற்ற ஒரு ஆட்சியை அளிப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து , முந்தைய தேர்தல் வெற்றியை மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்று நம்புகிறார்.

அவரது புதிய கூட்டணித் தலைவரான ராகுல் காந்தியும் இவ்வாறே விரும்புகிறார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption மீண்டும் வெல்ல முடியும் என்று நம்பும் அகிலேஷ் யாதவ்

பலம் பொருந்திய நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசான ராகுல், இந்தியாவின் மிகவும் பழைய மற்றும் பாரம்பரியம் மிக்க கட்சியை, தனது தாய் சோனியா காந்தியின் தலைமையில் இருந்து தான் முன்னெடுத்துச் செல்ல கூர்மையான முனைப்பில் உள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலை தனியாக சந்திப்பது கட்சிக்கு பெரும் தோல்வியாக அமையக் கூடும் என்று உணர்ந்த கட்சியினரை ஈர்க்கக் கூடியவரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா உள்ளிட்ட கட்சியின் மூலோபாய முடிவுகளை எடுப்பவர்கள், அகிலேஷின் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் கூட்டணி அமைத்தனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption சமாஜ்வாதி கட்சி கூட்டணி முடிவு பேச்சுவார்த்தைகளில் பெரும் பங்காற்றிய பிரியங்கா மற்றும் ராகுல்

மாயாவதியின் பலம் என்ன?

ஆனால், இவர்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த மாயாவதியின் வடிவத்தில் ஒரு தடை வரலாம்.

தலித் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு குரல் கொடுத்து வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான இந்த 62 வயது பெண், தன கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போராடி வருகிறார்.

அமைதியாகவும், ரகசியமாகவும் தனது திட்டங்களை தீட்டி வரும் மாயாவதிக்கு துணையாக, அவரைப் போலவே ரகசியமாகவும், அமைதியாகவும் உழைத்து வரும் கட்சி தொண்டர் படை அவருக்கு மிகவும் விசுவாசமாகவும் உள்ளது.

ஆளும் சமாஜ்வாதி கட்சியில் தொடர்ந்து நிலவி வரும் மோதல்கள் மற்றும் தங்கள் கட்சியின் சார்பாக பிரபல முதல்வர் வேட்பாளர் யாரையும் முன்னிறுத்தாத பாஜக ஆகிய அம்சங்கள், ஊடகங்களிடம் மேலும் உரையாடுவதற்கும், நகர்ப்புற வாக்காளர்களிடம் கட்சிக்கு வாக்குகளை பெறவும் மாயாவதியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தலித்கள் மத்தியில் செல்வாக்குள்ளவராக கருதப்படும் மாயாவதி

ஆனால், தேர்தல் என்றால் இவை மட்டுமா?

நிச்சயமாக இல்லை.

கென்யாவின் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு (ஜிடிபி) இணையாகவும், கத்தார் நாட்டின் பொருளாதாரத்தின் அளவுக்கு சமமாகவும் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி அதிகார சவால்கள் மிகவும் பெரியதாகும்.

இந்த மாநிலத்தின் பல டஜன் கிராமங்கள் இன்னமும் மின்சார வசதியை பெற காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், குழந்தைகள் இறப்பு விகித பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் உள்ள மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதாக அதிகாரபூர்வ தரவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரச்சனைகள் மிகுந்த உத்தரப்பிரதேச மாநிலம் (கோப்புப் படம்)

இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜனநாயக வாக்குப்பதிவு இன்னும் சிறிது காலத்தில் துவங்கவுள்ள சூழலில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகள், அரசியலைத் தாண்டி இப்பிரச்னைகளை தீர்க்க தங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்